மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

ஷாட் ரெடி... நிஜம் பழகு: அந்தத் துவைக்காத சட்டை!

ஷாட் ரெடி... நிஜம் பழகு: அந்தத் துவைக்காத சட்டை!

ஈரோடு கதிர்

திரைப்படங்களின் உதவியுடன் நிஜ வாழ்வை அணுகும் தொடர்

தொடர்ந்து போன் அடிக்கிறது. தொடர்ந்து அடிக்கிறது என்றால் யாரும் எடுக்கவில்லை என்றுதானே அர்த்தம். மூத்த மகன் சோஃபாவில் படுத்திருக்கிறான். இளையவன் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருக்கிறான். வயது வந்தவர்கள். அது துபாயிலிருக்கும் தந்தையின் அழைப்பென்று அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனாலும் எடுக்கவில்லை. வயதான அம்மா நளினி சமையல் அறையிலிருந்து வருகிறார். ”அப்பாவாதான் இருக்கும், நான் தூங்கிட்டேன்னு சொல்லிடு, இல்லைனா பேசிட்டே இருப்பாரு! இங்கே நடந்த எல்லா சின்னச் சின்ன விஷயங்கள் குறித்தும் கேட்பார்” என்கிறான் மூத்தவன். ”நானும் தூங்கிட்டேன்னு சொல்லிடு” என்கிறான் இளையவன். அம்மா போனை எடுக்கிறார்.

எதிர்முனையில் வளைகுடா நாட்டில் ஐம்பது ஆண்டுகளாக உழைத்துக்கொண்டு தனிமையில் வாழ்ந்துவரும் முதிர்ந்த தந்தை நாராயணன். “ஏன் இவ்ளோ நேரம்!?” என்கிறார். சமையலறையில் வேலையில் இருந்ததாகச் சொல்கிறார் நளினி. மகன்கள் குறித்துக் கேட்க, தூங்கிவிட்டதாகப் பொய் சொல்கிறார். ”சாப்பிட்டுட்டுதானே தூங்கினாங்க, என்ன சமைச்சே?” எனக் கேட்கிறார். மகன்களுக்காக கோழிக்கறியும் மீனும் சப்பாத்தியும் புட்டும் சமைத்ததைச் சொல்கிறார். “மொய்தீன் ஊருக்கு வர்றான். எதும் பொருட்கள் வேண்டுமா!?” எனக் கேட்கிறார். திரும்பி மகன்களை ஒருமுறை பார்த்துவிட்டு நிதானித்து சற்று தணிந்த குரலில் “நாள் முழுக்க போட்டிருந்த சட்டையொன்றை துவைக்காமல் அனுப்பி வைங்க” என்கிறார். இது மலையாளத்தில் தேசிய விருது பெற்ற பத்தேமாரி படத்தில் உலுக்கும் ஒரு காட்சி. “எ..ன்...னா நளினி இது!” என்கிற நாராயணனின் கேள்வியோடு அந்தக் காட்சி நிறைவடைகிறது.

இளம் வயது நாராயணனுக்குப் பொறுப்பில்லாத அப்பா, கை நிறைய சகோதரிகள். கள்ளத்தனமாக வளைகுடா நாடுகளுக்கு ஆட்களை அழைத்துச் செல்லும் படகில் உயிரைப் பணயம் வைத்துப் பயணித்து, கரை சேர்ந்து, உழைக்கத் தொடங்கி ஐம்பது ஆண்டுகள் முடிந்து விட்டன. ஐம்பது ஆண்டுக் காலம் என்பது வெறும் ஆண்டுகளின் எண்ணிக்கையல்ல. ஐம்பது தலைமுறைகள் அளவுக்கு நீளமானது. வளைகுடா வாழ்க்கை மட்டுமே எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு என நம்பியிருந்த காலமும்கூட.

பிம்பச் சாபம்

எப்பொழுதாவது ஊருக்கு வந்துபோகும் நாராயணனுக்கு ஊரிலேயே நிரந்தரமாகத் தங்கிவிட வேண்டுமெனும் ஆசையுண்டு. இளம் மனைவியை விட்டுச் செல்வதெல்லாம் அத்தனை எளிதா? உறவுகளுக்கும் நட்புகளுக்கும் துபாயிலிருந்து பரிசுப் பொருட்களோடு வந்திறங்கும்போது, நண்பன் பிரத்யேகமாக நாராயணனுக்குக் கொடுத்த பிஸ்தாவை தங்கை எல்லோருக்கும் வழங்குகிறாள். நாராயணனுக்கும் கொடுக்குமாறு அம்மா நினைவுபடுத்த, அதெல்லாம் தினமும் அண்ணன் அங்கே சாப்பிட்டிருக்கும் என்கிறாள் தங்கை. இது வெளிநாட்டில் வாழும் ஒவ்வொருவர் மீதும் சுமத்தப்படும் பிம்பச் சாபத்தின் ஒரு துளி.

எல்லோருக்கும் கொடுத்த பரிசுகள் போக, மனைவிக்கு என ஒதுக்கி வைத்துப் பரிசு கொடுப்பது, எப்போதும் உன்னோடு இருக்க வேண்டுமென அம்மாவிற்கு வளையல்கள் வழங்குவது என நாராயணன் நெகிழ்ந்து பெருக்கிறான்.

சகோதரிகளுக்குத் திருமணம், ‘வீட்டின் பங்கை நீயே வைத்துக்கொண்டு அதற்கான காசைக் கொடு, நான் கடை தொடங்குறேன்’ எனும் சகோதரனின் ஆசை என அனைத்திற்கும் நாராயணனே தீர்வாக இருக்கிறான். ஊரிலிருந்து துபாய் திரும்பிய பிறகு, அம்மா மரணமடைந்து, அந்தச் செய்தியும் தாமதமாகவே கிடைக்க, வாழும் மண்ணையும், தன் மண்ணையும் இணைக்கும் கடலின் கரையில் நின்று இயலாமையை, அழுத்தத்தைக் கரைக்கிறான்.

உழைத்தது போதுமென ஊரோடு இருந்துவிடலாம் எனத் தீர்மானிக்கும் தருணத்தில் மனைவி ’துபாய்க்காரன் மனைவி’யெனும் அங்கீகாரம் போகும் எனத் தயங்குகிறாள். விதவை சகோதரியின் மகளுக்குத் திருமணம் செய்ய ஏற்பாடு நடக்கிறது. சொந்த வீட்டைச் சீதனமாகக் கொடுக்கும் நிர்பந்தம் வருகிறது. திருமணத்திற்கு இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் தொடர்ந்து உழைத்துச் சம்பாதிக்க துபாய்க்குப் பறக்க வேண்டிவருகிறது. திருமணத்தன்று ஆவலோடு போன் செய்ய, கொண்டாட்டத்தில் இருக்கும் குடும்பம், பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. சீதனமாகக் கொடுத்த வீட்டில் நாராயணனின் குடும்பம் வாடகை கொடுத்து வசிக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. இனிமேல்தான் சம்பாதித்து தங்களுக்கென ஒரு வீடு கட்ட வேண்டிய நிர்பந்தம்.

வயது முதிர்கிறது. அப்படியான ஒருநாள் இரவில் போனில் அழைக்கும்போதுதான் மனைவி நளினி, துவைக்காத சட்டையொன்றை அனுப்பக் கேட்கிறார். அந்தத் துவைக்காத சட்டை அவர்களிடையான பிரிவைத் தகர்க்கும் எனக் கருதியிருக்கலாம், அந்தத் துவைக்காத சட்டை அவர்களுக்கிடையே நீண்டு கிடக்கும் கடலின் மீது பாலமாய்ப் பரவும் எனக் கருதியிருக்கலாம். அந்தத் துவைக்காத சட்டை துபாய்க்காரன் மனைவி எனும் வெற்றுப் பெருமிதத்தை வெளுத்துவிடும் என்றும் கருதியிருக்கலாம்.

*

கல்லூரிக் காலம் வரை மட்டுமே உள்ளூரில் இருந்து, அதன் பின்னான இரண்டு மடங்கு காலத்தை வெளிநாட்டில் கழித்திருப்பவர் அவர். தொழில், வீடு, பிள்ளைகள் என இனி மொத்த வாழ்க்கையுமே வெளிநாட்டில்தான் எனத் தீர்மானித்திருந்தாலும், ஊரில் கிடக்கும் வேரின் நுனி விடுவதாய் இல்லை. ஆண்டுக்கு ஒருமுறை அழைத்து, தன்னில் அழகு பார்த்தே அனுப்புகிறது. பிறந்த மண்ணும், முதிர்ந்த பெற்றவர்களும், உடன்பிறப்புகளும் எனும் உறவுச் சங்கிலியின் துண்டுபடாத கண்ணி வலுவாக இருப்பதே காரணம்!

மடை உடைத்த கண்ணீர்

இன்னொருவர், வீட்டிற்கு ஒரே பிள்ளை. மனைவியும் ஒரே பெண். இரண்டு குடும்பங்களும் சேர்த்து வைத்திருக்கும் சொத்து மதிப்பைக் கேட்டால் கிறுகிறுத்துவிடும். வெளிநாட்டிற்குப் பறந்து போன கணவனும் மனைவியும் பத்தாண்டுகளில் இரண்டு முறைதான் சொந்த மண்ணிற்குச் சுற்றுலாபோல் வந்து போயிருக்கிறார்கள். உடன் அழைத்து வரும் தம் குழந்தையை இந்தியாவின் எதுவும் ஆக்கிரமித்துவிடக் கூடாது என்பதில் மிகத் தீவிரமாய் இருப்பார்கள். எதுவும் என்பதில் மூத்தவர்களின் அன்பும் பாசமும் அடக்கம்தான். மூத்த குடிமக்களாகிவிட்ட இரு தரப்பு பெற்றோர்களும் ஏதோ ஒரு நினைப்பில் காத்திருக்கிறார்கள்.

இன்னொரு நண்பன், அமெரிக்க வாழ்க்கையில் ஏறத்தாழ இருபது ஆண்டுகளைக் கடந்துவிட்டான். எப்போது பேசினாலும் அவன் இங்கிருந்து பயணப்பட்ட காலத்தில் மட்டுமே உறைந்து கிடப்பதை உணர்த்துவான். வெளிநாட்டு வாழ்க்கை ஒருவிதமாய் மூச்சுமுட்டிக் கொண்டேயிருக்க, எப்போது வாய்ப்புக் கிடைத்தாலும் ஓடிவந்து ஊரில் விழுந்து கிடக்க ஆசை. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே ஊருக்கு வரும் வாய்ப்பு. அப்படி வருகையில் அமெரிக்கா திரும்ப வேண்டிய நாட்கள் நெருங்கும்போது மெல்ல இறுகத் தொடங்குவான், கிளம்ப வேண்டிய தினத்தில் ஹாஸ்டல் போகும் குழந்தைபோல் கதறி அழுவான். தேற்றி அனுப்புவதற்குப் பெரும் பிரயத்தனம் தேவைப்படும். கம்பீரமான அவனுக்குள் அத்தனை அழுகை எப்படியெனத் தோன்றும்.

வெளிநாட்டு வாழ்க்கையை விடுங்கள், காஷ்மீர், சண்டிகர், சிக்கிம் என மாறி மாறி முக்கியப் பொறுப்பில் இருக்கும் ராணுவ அதிகாரி அவர். ஆறு மாதத்திற்கு ஒருமுறை விடுப்பில் வருவார். எல்லோரிடமும் மிகுந்த நட்போடு கலகலப்பாகப் பேசுகிறவர், விடுப்பு தீரும் நாட்களில் யாரிடமும் பேசாமல் ஒடுங்கி வீட்டிற்குள்ளேயே முடக்கிக் கொள்வார். பயணிக்க வேண்டிய தினத்தில் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல், ரகசியமாய் புறப்பட்டுச் சென்று, சில நாட்கள் கழித்து எல்லோரையும் அழைத்து இயல்பாகப் பேசுவதை என்னவென உணர்ந்துகொள்ள!?

இன்னொரு சிங்கப்பூர் நண்பன், ஊருக்கு வந்துவிட்டால் போகவே மனசு வராது, ஆனால் சிங்கப்பூர் சென்று இறங்கியதும், சட்டென சிங்கப்பூர் வாழ்க்கைக்குள் மூழ்கி ஒட்டுமொத்த ஊரையும் உறவுகளையும் மறந்துவிடுவதாகச் சொல்வான். அதனைக் குற்ற உணர்வு ஏதுமின்றி மிக இயல்பாக எதிர்கொள்வதாகவும், அதுதான் தன்னளவில் நிதர்சனம் என்றும் சொல்வான்.

இவர்களெல்லாம் ஒரு பக்கமென்றால், இன்னொரு பக்கம், மணிப்பூர் மாநிலத்திலிருந்து திருப்பூரிலும், பிகாரிலிருந்து திருவனந்தபுரத்திலும், பங்களாதேஷிலிருந்து மாலத்தீவிலும் பணியாற்றும் இளம் கணவன்களின் அழுக்குச் சட்டைகளை வேண்டி ஊரில் அவர்தம் இளம் மனைவி காத்திருக்கலாம்.

*

எல்லாரையும் இடம்பெயர்த்த ஏதோவொன்று முனைந்து கொண்டேயிருக்கிறது. ஒளிர்ந்து மறையும் சூரியன், வீசாத காற்று, அலையடிக்காத கடல் சாத்தியமா? மனிதனின் நகர்வு என்பதும் தவிர்க்க முடியாததுதான். சிறுசிறு நகர்வுகள் பெரும் தாக்கங்களை ஏற்படுத்துவதில்லை. பெரும் நகர்வுகள் ஒருவகையில் உயர்வுக்கு அவசியமெனினும், அவை கோரும் தியாகமும் தரும் அழுத்தமும் எளிதானவையன்று. முதலில் விலையாகக் கேட்பது உறவுகளின் கதகதப்பையும், வேர் பாய்ந்திருக்கும் மண்ணின் நெகிழ்வையும்தான். பொதுவாகவே அருகிலிருக்கும் வரை உறவுகளின், தம் சூழலின் உன்னதம் புரியாதது மனித உறவுகளுக்கேயான சாபக்கேடு எனச் சொல்லலாம். ஆரம்பத்தில் பெரிதாகத் தோன்றவில்லையெனினும் போகப்போகத் தொலைவு பெரும் அயர்ச்சியைக் கொடுக்கக்கூடியதாய் மாறிவிடுகிறது.

மூன்று ஆண்டுகள் மகளையும், மகனையும் பிரிந்து வெளிநாட்டில் வசிக்கும் ஒரு தந்தை ஊர் திரும்புகிறார். மகளுக்கும் மகனுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்க விரும்புகிறார். மனைவியுடன் திட்டமிடுகிறார். அதன்படி மனைவி பிள்ளைகள் ஓர் உணவகத்தில் அமர்ந்திருக்கிறார்கள். மனைவி வீடியோ பதிவு செய்கிறார். முகத்தைத் துணியால் மூடிக் கட்டியபடி தந்தையே உணவு பரிமாறுகிறவராக வருகிறார். சற்று நேரம் கழித்து முகத்திலிருக்கும் துணியை எடுத்துவிட்டு வருகிறார். வந்துவிட்டுத் திரும்பும்போது நிமிர்ந்த மகள் பரிமாறுவது தன் அப்பாவென்பதைக் கண்டு, அதிர்ந்து, சிலிர்த்து, மகிழ்ந்து, இன்ப அதிர்ச்சியில் குலைந்து அழத் தொடங்குகிறார். அக்கா அழுவதைக் காணும் தம்பியும், பரிமாறுபவரை உற்றுப் பார்த்து, அப்பாவென அடையாளம் கண்டு கலங்கிக் கதறுகிறான். எத்தனையோ ஆறுதல்கள் சொல்லியும் பிள்ளைகளைத் தேற்ற முடியாமல் அவர்களை அணைத்தபடி அப்பாவும் கலங்குகிறார்.

இதயத்தில் கலந்த பதற்றம்

வெளிநாட்டு வாழ்க்கை மேல், தொலைதூரப் பெருநகர வாழ்வின் மேல், வளமான நிலப்பரப்பு வாழ்வின் மீது, அது கிட்டாதவர்களுக்குப் ஒரு பெருமயக்கம் இருப்பதுண்டு. வண்ணமயமான நினைப்புகளும் ஆர்வங்களும் உண்டு. நமக்கும் கிட்டிவிடாதா எனும் ஏக்க வேட்கையுண்டு. ஆனால், அப்படியான வாழ்வில் மண்ணை, ஊரை, வேரை, உறவுகளை, வாழ்வியல் முறைகளை, நட்புகளை இழப்பதென்பது அத்தனை எளிதல்ல. அந்த இழப்பிற்குக் கொடுக்கும் விலைக்கு ஏதும் நிகராகாது. குடும்பமாகப் பெயர்ந்தவர்களுக்கு அங்கும் ஒரு கூட்டிற்குள் இருக்கும் கதகதப்பு இருக்கும். தனிக்கூடாக இருக்கும் நிலை மட்டுமே பிரச்சினை. ஆனால், குடும்பத்தை விட்டுவிட்டு தனித்துப் போவோருக்கு தம்மையுமறியாமல் ஒரு பதற்றம் இதயத் துடிப்பினூடே கலந்திருக்கும். அதை அவ்வளவு எளிதில் தணித்துவிட முடியாது. அதை எந்தக் கருவி கொண்டும் அளக்கவும் முடியாது.

அப்பா எனும் வாசனையை, கம்பீரத்தை, உழைப்பை, கடுமையை, தியாகத்தை எந்தப் பிள்ளையும் இழக்க விரும்புவதில்லை. ஒட்டிக்கொண்டே இருக்கவில்லையென்றாலும், தொடர்பில் இருப்பதைப் பலமாக, அருகில் இருப்பதைக் கதகதப்பாக, இன்னும் சொல்லப்போனால் நம்பிக்கையாக, பாதுகாப்புக் கவசமாக உணர்கின்றனர். எனினும் பிள்ளைகளின் உலகம் அடுத்த தலைமுறைக்கானது, மேலே குறிப்பிட்ட உணர்வுகளுக்குள் சற்றே ஏற்றத்தாழ்வும் சமரசங்களும் உண்டு.

ஆனால், திருமணத்தின் வாயிலாக இன்னொரு மண்ணிலிருந்து பிடுங்கப்பட்டு, புது மண்ணில் வேர் பாய்ச்சி, புது உலகத்தில் உறவாய் நிலைத்துப்போகும் மனைவி படும் பாடு சொற்களுக்குள் அடங்காத ஆயிரமாயிரம் நுண்ணிய சிக்கல்களைக் கொண்டவை. இளமையை, துள்ளலை, கொண்டாட்டத்தை மட்டும் தியாகம் செய்வதில்லை. கதகதப்பு, குளிர்ச்சி, இதம், அரவணைப்பு, தைரியம், பங்களிப்பு என இழப்பவற்றின் பட்டியல் மிகப் பெரியது.

எல்லாவற்றிற்கும் ஒரு விலையிருக்கிறது. சரி, பிரிவின் வாதைக்கு விலையேது? அதை நிறுத்தவும் அளக்கவும் கருவிகளும் ஏது? உணர்தல் மட்டுமே மெய்யான அளவீடு. அந்தப் பிரிவின் வாதைக்கான மிகச் சிறு ஆறுதலென்பது அவ்வப்போது துவைக்காமல் வரும் வியர்வை வாசம் சுமந்த சட்டைகளாகவும் இருக்கலாம்!

*

(கட்டுரையாளர் ஈரோடு கதிர் எழுத்தாளர், மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர், பேச்சாளர். உறவெனும் திரைக்கதை, பெயரிடப்படாத புத்தகம், கிளையிலிருந்து வேர்வரை ஆகிய நூல்களின் ஆசிரியர். அவரைத் தொடர்புகொள்ள: [email protected])

*

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon