மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

உங்கள் மனசு: இரண்டு ஜோடிகள், மூன்று உறவுகள்!

உங்கள் மனசு: இரண்டு ஜோடிகள், மூன்று உறவுகள்!

டாக்டர் சுனில்குமார், டாக்டர் ஜெயசுதா காமராஜ்

மனதை ஆராய்ந்து, வாழ்வை அலசும் சிறப்புத் தொடர்

எதையும் உள்வாங்கிக்கொள்ளாமல், அது குறித்த வெளிப்பாட்டைக் கொட்டுவதையே வழக்கமாக்கிக்கொண்டுள்ளனர் நம்மில் பலர். இதனால், நொடிக்கொரு பரபரப்புச் செய்திகள் உலாவரும் உலகில் அபிராமிகளும் சுந்தரம்களும் மட்டுமே நம் மனதில் சில நாட்கள் நிலைத்து நிற்கின்றனர். திருமணத்திற்குப் பின் ஏற்பட்ட காதலுக்காக, தான் பெற்ற குழந்தைகளையே கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளார் அபிராமி. இதற்குத் தூண்டுதலாக இருந்ததாகக் கைதாகியுள்ளார் சுந்தரம். இதுபோன்ற ஓராயிரம் செய்திகளைக் கடந்த காலத்தில் கடந்து வந்துள்ளது தமிழுலகம்.

கள்ளக் காதலுக்காகக் கணவனைக் கொன்ற மனைவி அல்லது மனைவியைக் கொன்ற கணவன் என்று வெளியாகும் செய்திகளை, பெரும்பாலானோர் இப்போது பொருட்படுத்துவதில்லை. சமூகம், அரசியல், சினிமா என்று செய்தித்தாள் பக்கங்களில் வகை பிரிப்பது போல, இதுபோன்ற செய்திகளும் தங்களுக்கான பக்கங்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்கின்றன. இதையும் மீறி, அபிராமி - சுந்தரத்தின் உறவு போன்ற சில விவகாரங்கள் பொதுவெளியில் கொதிப்பை உண்டாக்குகின்றன.

திருமணத்துக்கு வெளியேயான உடலுறவு வேட்கைகளும் காதல்களும், பெற்ற குழந்தைகளைக் கொல்லும் மனநிலையை உருவாக்குமா? யாரோ பெற்ற குழந்தைகள் மீது வரும் பரிதாபம்கூடத் தங்களது குழந்தைகள் மீது இவர்களுக்கு உண்டாகாதா? ‘கள்ளக் காதல் பண்றவங்களை எல்லாம் தூக்குல போடணும்ங்க’ என்ற கருத்துக் குவியல்களுக்கு மத்தியில், இதுபோன்ற சிந்தனைகளின் வேரைக் கண்டறிய வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை இதுபோன்ற கொடூரங்கள் நிகழக் கூடாது என்ற பதைபதைப்பு, இதுபோன்ற பிரச்சினைகளுக்கான சரியான தீர்வை விரும்புபவர்களைத் தொற்றியுள்ளது.

இந்தச் சூழலில், இதுபோன்றதொரு பிரச்சினைக்குள்ளான இரு குடும்பங்கள் அதிலிருந்து எப்படி மீண்டன என்று பார்க்கலாம்.

வெளிப்படுத்த இயலாத பிரச்சினை

“தனது பிரச்சினை என்னவென்பதைச் சொல்ல இயலாது; ஆனால், அந்தப் பிரச்சினையில் இருந்து முழுதாக வெளியே வர வேண்டும். இதனால், பல நாட்களாகத் தூங்காமல் தவிக்கிறேன்.” இப்படித்தான் உத்ராவுடனான உரையாடல் தொடங்கியது. உத்ராவின் கணவர் சந்தீப்தான், மைண்ட் ஸோன் மருத்துவமனைக்கு அவரை அழைத்து வந்திருந்தார். தொடர்ச்சியாகத் தற்கொலை முயற்சிகளில் உத்ரா ஈடுபட்டதே இதற்குக் காரணம்.

தனக்கான தீர்வைத் தேடும் மனநிலையில் இருந்த உத்ரா, அது குறித்து அனைவரது முன்னிலையிலும் பேசத் தயங்கினார். குறிப்பாக, சந்தீப் முன்னால் தனது பிரச்சினைகளைச் சொல்ல அவர் விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. இதனைப் புரிந்துகொண்டு, அடுத்த முறை உத்ரா மட்டும் வந்து ஆலோசனை பெறுவார் என்று தெரிவித்தார் சந்தீப். அவரது பெருந்தன்மை மிகவும் அரிதானது. தற்கொலை எண்ணம் உண்டாகும் அளவுக்குத் தங்களது மண வாழ்க்கையில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதைக் கவலையுடன் அவர் குறிப்பிட்டார்.

பிரச்சினை என்னவென்பதைத் தெரிந்துகொள்ளாத நிலையில், உத்ராவுக்கான மனநல சிகிச்சைகள் தொடங்கியது. இதற்காக, அவரிடம் ஒரு கேள்வித்தாள் தரப்பட்டது. அதில், பல்வேறு வகைப்பட்ட கதைகளை எழுதுமாறு கூறப்பட்டது. உத்ரா எழுதிய பெரும்பாலான கதைகள், திருமண பந்தத்துக்கு வெளியேயான காதலைப் பற்றியே பேசின. அதிலுள்ள சிக்கல்களைத் தீர்க்க முடியாமல் கதை மாந்தர்கள் தவிப்பதை வெளிக்காட்டின.

திருமண உறவுக்கு அப்பால்

இதனை ஆய்வு செய்த பிறகு, அவரது திருமண வாழ்க்கை குறித்துப் பேசினோம். தனக்கும் தனது கணவருக்கும் எந்தவிதமான பிரச்சினையும் இல்லையென்று முதலில் தெரிவித்தார். திருமணத்துக்கு வெளியே காதல் தொடர்புகள் இருக்கின்றனவா என்ற கேள்விக்குப் பதில் சொல்லத் தடுமாறினார். மெதுவாக, தனது வாழ்க்கை குறித்துப் பேசத் தொடங்கினார்.

நடுத்தர வசதியுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர் உத்ரா. கல்லூரிப் படிப்பை முடித்திருந்தாலும், அவருக்குப் பணி செய்வதில் விருப்பமில்லை. இதற்கேற்றவாறு, கப்பலில் வேலை செய்யும் சந்தீப் கணவனாக அமைந்தார். அவரது குடும்பம் மிகவும் வசதியான பின்னணி உடையது. உறவினர்களில் பலர், இந்தியா முழுவதுமுள்ள நகரங்களில் இருக்கின்றனர். சென்னையில் அவரது உறவினர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதனாலேயே, உத்ராவைத் திருமணம் செய்துகொள்ள அவர் சம்மதம் தெரிவித்தார்.

திருமணம் முடிந்தபிறகு, சில மாத காலம் மிக மகிழ்ச்சியான வாழ்வை அனுபவித்தார் உத்ரா. சந்தீப் வேலைக்குச் செல்லத் தொடங்கியபோது, உத்ராவின் மனம் அயர்வடையத் தொடங்கியது. ஆறு மாத காலம் கப்பல் பயணத்தில் இருப்பார் சந்தீப். அதன்பின், இரண்டு மாத காலம் இந்தியாவில் இருப்பார். ஊரில் இருக்கும் நாட்களில் நண்பர்கள், உறவினர் வீடுகளுக்குச் செல்வது, வெளியிடங்களைச் சுற்றிப் பார்ப்பது, இதர கேளிக்கைகளில் ஈடுபடுவது என்றிருப்பார். எங்கு சென்றாலும் தன்னுடன் உத்ராவையும் அழைத்துச் செல்வார். இரண்டு குழந்தைகள் பிறந்த பின்பும், இந்த நிலையில் சிறிதும் மாற்றம் ஏற்படவில்லை. இதற்கு மாறாக, உத்ராவின் வாழ்க்கை நிறைய மாற்றங்களை எதிர்கொண்டது.

சந்தீப்பின் நண்பர் சரண். அதே ஊரில் குடும்பத்துடன் வசித்தார். பள்ளிப் பருவ நண்பர்களாக இருந்ததனால், இருவரது குடும்பங்களும் நெருக்கமான உறவைப் பேணின. உத்ரா – சந்தீப் தம்பதியர் அடிக்கடி சரண் வீட்டுக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். சந்தீப் வெளிநாடு சென்றாலும், சரண் உத்ராவைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்துகொடுப்பார். உத்ரா மற்றும் சந்தீப்பின் உறவினர்களைத் தாண்டி, அந்தக் குடும்பத்துக்கு நெருக்கமானவராக விளங்கினார் சரண். இதனால், சந்தீப் மனதில் எந்த உறுத்தலும் எழவில்லை. அவரது குழந்தைகளும் தங்களது உறவினராகவே சரணை நினைத்தனர்.

சரணுக்கும் உத்ராவுக்கும் நெருக்கம் அதிகமாகத் தொடங்கியது. எல்லை தாண்டிய நட்பையும் மீறி, வேறொரு நிலைக்குச் சென்றனர். வழக்கமாக இதுபோன்ற உறவுகள், உடல் தொடர்போடு நின்றுவிடும். ஆனால், சரண் – உத்ரா விஷயத்தில் அப்படி நடக்கவில்லை. இதற்காகவே, தங்களது மண வாழ்க்கையில் எந்தப் பிரச்சினையும் வராமல் இந்த உறவைப் பேணுவது என்று இருவரும் பரஸ்பரம் ஒப்பந்தம் செய்திருந்தனர். சில ஆண்டுகளாக, இந்த பந்தம் தொடர்ந்தது. இதுநாள் வரை, சந்தீப் – உத்ரா இடையிலான மண வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதற்கேற்றவாறு, இந்த உறவை சரணும் உத்ராவும் பார்த்துக்கொண்டனர். அதுபோலவே, சரணும் தன் குடும்ப வாழ்க்கையைத் தகவமைத்துக்கொண்டார்.

ஒட்டிக்கொண்ட பொறாமை

அலுவல் நிமித்தமாக, திடீரென ஒருநாள் சரண் மும்பைக்கு மாற்றலானார். அந்த நாள், உத்ராவின் வாழ்க்கையில் கறுப்பு நாளாக மாறியது. அதுவரை சந்தீப், சரண் இடையேயான உறவைச் சரியான வகையில் பேணிக்கொண்டிருந்த உத்ரா, அதன்பின் தடுமாற்றத்துக்கு உள்ளானார். சரணை அவ்வப்போது சந்தித்துவந்தவர், அவர் இல்லாத நாட்களில் வெறுமை நிரம்பியதாகக் கருதினார். சரண் மனைவி மீது கோபம் கொள்ளும் அளவுக்கு, உத்ராவின் மனதில் அவர் மீதான பொசஸிவ்னஸ் அதிகமானது.

“உன்னைப் பார்க்கணும் போலிருக்கு, உடனே கிளம்பி வா” என்று அழைக்கும் அளவுக்கு நிலைமை கைமீறிச் சென்றது. இல்லாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்று உத்ரா மிரட்டவே, உடனடியாக விமானம் ஏறி வந்திருக்கிறார் சரண். காலை முதல் மாலை வரை உத்ராவுடன் இருந்துவிட்டு, மீண்டும் விமானம் ஏறி மும்பை சென்றிருக்கிறார். ஒருமுறை அல்ல, பலமுறை இதுபோன்று நிகழ்ந்துள்ளது. இந்த விஷயம் எதுவும், இரண்டு குடும்பத்தினருக்கும் தெரியவேயில்லை.

சரணைச் சந்திக்கும்போதெல்லாம், தனக்காக ஓர் ஆண்மகன் இருக்கிறான் என்றெண்ணிச் சாந்தமடைந்திருக்கிறார் உத்ரா. ஒருகட்டத்தில் சரணைப் பார்க்க முடியாத ஏக்கம், அவர் மனதில் பெருங்கோபமாக உருவெடுத்தது. அது மட்டுமல்லாமல், சரண் தனது மனைவி, குழந்தைகளைப் பற்றிப் பேச்செடுத்தாலே ஆத்திரம் அதிகமாவதை உணர்ந்தார். “அவரது மனைவியையும் குழந்தைகளையும் கொலை செய்யும் அளவுக்கு என்னுள் எண்ணங்கள் எழுந்தன. அவர்கள் இருந்தால்தானே, சரணின் பாசம் அந்த திசையில் இருக்கும்” என்றுகூட நினைத்திருக்கிறார் உத்ரா. அவரே, இந்த உண்மைகளை வெளிப்படுத்தினார்.

குற்ற உணர்ச்சியின் ஊற்று

ஒருமுறை மும்பைக்குச் சென்ற உத்ரா, சரண் வீட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அங்கு, மனைவி மற்றும் குழந்தைகளிடம் சரண் காட்டிய பாசத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். குறிப்பாக, சரணுக்கும் அவரது மனைவிக்கும் இடையில் இருந்த அந்நியோன்யத்தைக் கண்டு பொறாமையின் உச்சத்துக்குச் சென்றார். அவரால், அதனைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. தன் மனைவி மற்றும் குழந்தைகளுடனான சரணின் வாழ்க்கையில் எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால், சரண் மீதான காதலில் தனது குடும்ப வாழ்க்கையைக் கோட்டைவிட்டதாக நினைத்தார் உத்ரா. அந்த நொடியில், அவரது மனதில் குற்ற உணர்ச்சி நயாகராவாகப் பெருக்கெடுத்தது.

உத்ராவின் குற்ற உணர்ச்சிதான், அவரைத் தற்கொலை முயற்சியை நோக்கித் தள்ளியதா? சரணைப் பழிவாங்கும் உணர்வு எதனால் அவருக்கு ஏற்பட்டது?

(நாளை...)

பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன

எழுத்தாக்கம்: உதய் பாடகலிங்கம்

கட்டுரையாளர்கள்:

டாக்டர் சுனில்குமார், மருத்துவ உளவியல் நிபுணர்

மைண்ட் ஸோன் மருத்துவமனையின் நிறுவனர். மணிபால் கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரியில் மருத்துவ உளவியல் பயின்றவர். மது போதை பற்றி ஆய்வுப் பட்டம் பெற்றவர். குழந்தைகள் மனநல மருத்துவராக, 2002 – 2009ஆம் ஆண்டுகளில் புதுச்சேரி அரசுப் பொது மருத்துவமனையில் பணியாற்றியவர். இவர், மனநல சிகிச்சை குறித்து தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஆய்வேடுகளைச் சமர்ப்பித்திருக்கிறார். சமகாலச் சமூகம் எத்தகைய மனநல பாதிப்புகளை எதிர்கொண்டுவருகிறது என்பதற்கான இவரது தீர்வுத் தேடல் தொடர்கிறது.

டாக்டர் ஜெயசுதா காமராஜ், உளவியல் நிபுணர்

மைண்ட் ஸோன் மருத்துவமனையின் இணை நிறுவனர். சென்னை பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் உளவியல் பிரிவில் எம்.பில். பட்டம் பெற்றவர். மது போதை குறித்து ஆய்வுப் பட்டம் பெற்றிருக்கிறார். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான கருத்தரங்குகளில் ஆய்வேடுகள் சமர்ப்பித்திருக்கிறார். குடும்ப நல ஆலோசனை, போதை மீட்பு, குழந்தை வளர்ப்பு மற்றும் பெற்றோர் திறம் போன்ற விஷயங்களைக் கையாளுவதில் வல்லுநர்.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon