மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 16 ஜூலை 2020

வெற்றியை நெருங்கும் இங்கிலாந்து!

வெற்றியை நெருங்கும் இங்கிலாந்து!

ஐந்தாவது போட்டியிலும் இந்தியாவை வீழ்த்தி 4-1 என தொடரை கைப்பற்ற இங்கிலாந்து தயாராகி வருகிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 332 ரன்கள் சேர்த்தது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா முன்னணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த தொடரில் முதன்முறையாக களம் கண்ட ஹனுமா விஹாரி - ரவீந்திர ஜடேஜாவின் கடைசி கட்ட பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா 292 ரன்கள் சேர்த்தது. 40 ரன்கள் முன்னிலையுடன் தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்திருந்தது. குக் 46 ரன்களுடனும், ரூட் 29 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நேற்றைய நான்காம் நாள் ஆட்டத்தில் தொடர்ந்து ஆடிய குக்-ரூட் ஜோடி நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தியது.

கடைசி டெஸ்ட்டில் ஆடிய குக், அவரது 33ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார். 46 ரன்களில் ரூட் கொடுத்த எளிய கேட்ச் வாய்ப்பு ரஹானேவால் வீணடிக்கப்பட்டது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட ரூட்டும் சதமடித்து அசத்தினார். டெஸ்ட் அரங்கில் இது அவரது 14ஆவது சதமாகப் பதிவானது. இதனையடுத்து இங்கிலாந்தின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தன. இறுதியில் 8 விக்கெட் இழப்பிற்கு 423 ரன்கள் சேர்த்து இங்கிலாந்து தனது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இந்தியா சார்பில் ஹனுமா விஹாரி, ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

464 என்ற கடின இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் ஷிகர் தவன் (1), புஜாராவின் (0) விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தன. அடுத்த சில நிமிடங்களில் கோலி, ரன் கணக்கை துவங்கும் முன்பே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். வெறும் 2 ரன்களுக்குள் முதல் 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா கடும் நெருக்கடிக்கு உள்ளானது. இதனைத் தொடர்ந்து வந்த ரஹானே, ராகுலுடன் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டார். ராகுல் பவுண்டரிகளிலேயே அதிக கவனம் செலுத்தினார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்திருந்தது. 8 பவுண்டரிகளை அடித்த ராகுல் 46 ரன்களுடனும், ரஹானே 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

முக்கிய விக்கெட்டுகள் நேற்றே விழுந்துவிட்டதால் இன்றைய ஆட்டம் இங்கிலாந்துக்கு சாதகமாக முடிவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் இன்றைய ஆட்டத்தில் எஞ்சிய இந்திய வீரர்கள் வருவதும், போவதுமாக இல்லாமல் வரவிருக்கும் ஆஸ்திரேலியத் தொடரை கருத்தில்கொண்டு தங்கள் இடத்தை தக்கவைத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon