மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

வேதாந்தாவின் திட்டங்கள் இவ்வளவு ஆபத்தானவையா?

“கேரளாவில் ஏற்பட்டது, மனித நடவடிக்கைகளால் ஏற்பட்ட பேரழிவு. உண்மையான இயற்கைப் பேரழிவை நாம் இனிதான் பார்க்கப் போகிறோம்.”

- தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர்

கடலோர மாவட்டங்களான சென்னை, நாகை உள்ளிட்டவை கடல் நீரால் மூழ்கடிக்கப்படும் அபாயம் உள்ளது என்று எச்சரித்துள்ளார் தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் எஸ்.ஜனகராஜன். மேலும், கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு இடுக்கி அணை நீர், பருவநிலை மாற்றம், இயற்கைச் சீற்றம் என்று பல்வேறு காரணங்களை அரசு அடுக்கினாலும், உண்மையில் அது மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பேரிடர். இயற்கைச் சீற்றம் என்றால் என்னவென்பதை நாம் இனிதான் பார்க்கப் போகிறோம் என்று கூறி தனது ஆய்வு முடிவுகளை அடுக்கினார்.

அவர் கூறிய தகவல்கள் யாவும் எச்சரிக்கைகள் என்பதைவிட, அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவுகள் என்றே சொல்ல வேண்டும். குவாரிகள், நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் போன்ற மக்கள் எதிர்ப்புகளை எதிர்கொள்ளும் திட்டங்களினால் ஏற்படப் போகும் புவியின் உள்-நில மாற்றங்களை நாம் இதுவரை கேட்டிராத பரிமாணத்தில் அவர் விளக்கியுள்ளார்.

தொழிற்புரட்சியே மூல காரணம்

ஒரு மலையில் குவாரிகள் அல்லது நியூட்ரினோ போன்ற திட்டங்களுக்காகப் பாறைகளை உடைக்கும்போதும் குடையும்போதும் அந்தப் பாறையோடு இணைந்த உறுதியான மண் பிணைப்பு நெகிழ்ந்துவிடும். இவ்வாறான இடங்களில் மழை பொழியும்போது நிலச்சரிவு ஏற்படும்.

நிலத்தடியிலிருந்து மீத்தேன் போன்ற எரிவாயுக்களை எடுக்கும்போது, அவற்றுடன் சேர்த்து நிலக்கரி, பாறைகள், தண்ணீர் ஆகியவற்றையும் வெளியேற்ற வேண்டும். அப்படிச் செய்யும்போது, நிலத்தின் உட்பகுதியில் வெற்றிடம் ஏற்படும். கடலோர மாவட்டங்களுக்கு இதனால் பெரிய பாதிப்புகள் உண்டாகும். முக்கியமாக நாகை மாவட்டம் மொத்தமாகக் கடலில் மூழ்கும்.

நாகை மாவட்டத்தில் மீத்தேன் எடுத்தால், நிலத்தடியில் வெற்றிடம் ஏற்பட்டு நிலமட்டம் தாழ்ந்துபோகும். எனவே, கடல் நீர் எளிதில் உட்புகுந்து இயற்கையின் சமநிலையைச் சீர்குலைக்கும் என்கிறார் ஜனகராஜன். இதற்கு எடுத்துக்காட்டாகக் கேரள வெள்ளத்துக்கான காரணங்களை முன்வைக்கிறார் அவர்.

கேரள வெள்ளத்திற்கான முக்கியக் காரணம், மேற்குத்தொடர்ச்சி மலையின் இயற்கைச் சூழல் பாதுகாப்பு குழு சமர்ப்பித்த அறிக்கையின் விதிமுறைகள் பின்பற்றப்படாததுதான். மேற்குத்தொடர்ச்சி மலையை நான்கு மண்டலங்களாகப் பிரித்து, அவற்றுள் மூன்று மண்டலங்களைப் பாதுகாப்பு வட்டத்திற்குள் கொண்டுவந்து அதில் குவாரிகள், குடியேற்றங்கள் என்று எந்தச் செயலையும் அனுமதிக்கக் கூடாது என்பது அந்தக் குழுவின் பரிந்துரை. ஆனால், இந்தப் பரிந்துரை பரீசிலிக்கப்படவில்லை.

இந்த விவகாரங்களில் தமிழகத்தின் நிலமை மிக மோசமாக உள்ளது. செயல்பாட்டில் இருக்கும் குவாரிகளையும், மலைகளைக் குடையும் திட்டங்களையும் நிறுத்த வேண்டும் என்பதே வேண்டுகோள். ஆனால், புதிய திட்டங்கள் வராமல் தடுப்பதே மிகப் பெரிய வேலையாகி வருகிறது. இந்நிலை நீடித்தால், நாளை தமிழகமும் பேரழிவுக்கான பெரும் எடுத்துக்காட்டாக ஆகிவிடும்.

(எஸ்.ஜனகராஜனைத் தொடர்புகொள்ள :[email protected])

- நரேஷ்

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon