மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

சட்டப்பிரிவு 35ஏ: தேர்தலைப் புறக்கணிக்கும் மெகபூபா

சட்டப்பிரிவு 35ஏ: தேர்தலைப் புறக்கணிக்கும் மெகபூபா

ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்பதாக தேசிய மாநாடு கட்சி அறிவித்திருந்த நிலையில், மக்கள் ஜனநாயகக் கட்சியும் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை நகராட்சித் தேர்தல்களும், நவம்பர் எட்டாம் தேதியில் தொடங்கி பஞ்சாயத்துத் தேர்தல்களும் நடைபெறவுள்ளது.

35ஏ சட்டப்பிரிவை நீதிமன்றத்தில் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும். இல்லையெனில் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம் என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா தெரிவித்தார். பின்னர் உள்ளாட்சித் தேர்தலோடு மக்களவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலையும் புறக்கணிப்போம் என்று அவர் அறிவித்தார்.

இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக மக்கள் ஜனநாயக கட்சியும் அறிவித்துள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (செப்டம்பர் 10) செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, “சட்டப் பிரிவு 35ஏ தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கும் சூழலில் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படுவது மக்களின் மனதில் ஜனநாயக அமைப்புகளின் நம்பகத்தன்மையைச் சீர்குலைத்து விடும். மாநிலத்தின் சிறப்பு அதிகாரங்கள் மீதான தாக்குதலாகவே அவர்கள் இதனை பார்ப்பார்கள். எனவே, இந்தத் தேர்தல்களை புறக்கணிப்பதாக எங்கள் கட்சியின் சார்பில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

அதேவேளையில், சட்டப் பிரிவு 35ஏவைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

1954ஆம் ஆண்டு, அப்போதைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் உத்தரவின் பேரில் 35ஏ பிரிவு இந்திய அரசியல் சட்ட சாசனத்தில் இணைக்கப்பட்டது. 35ஏ சட்டப் பிரிவானது, ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்குப் பல்வேறு சிறப்பு அதிகாரங்களை அளிக்கிறது. இந்தச் சட்டப் பிரிவை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலையும் சட்டம் ஒழுங்கு நிலைமையையும் கருத்தில்கொண்டு, இந்த வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon