மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

பெட்ரோல், டீசல்: வரியைக் குறைக்க கோரிக்கை!

பெட்ரோல், டீசல்: வரியைக் குறைக்க கோரிக்கை!

எரிபொருள்கள் மீதான கலால் வரியை மத்திய அரசும், மதிப்புக் கூட்டு வரியை மாநில அரசும் குறைக்க வேண்டும். ஆனால், இரு அரசுகளும் வரியைக் குறைக்க மறுப்பது மக்களால் மன்னிக்க முடியாத மோசடி ஆகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் நேற்று (செப்டம்பர் 10) வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்திருக்கிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 25 காசுகள் அதிகரித்து ரூ.83.91 ஆகவும் டீசல் விலை 23 காசுகள் அதிகரித்து ரூ.76.98 ஆகவும் உயர்ந்துள்ளன. எரிபொருள் விலை உயர்வால் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விலையைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகின்றன. கடந்த 26 நாட்களில் 22 முறை எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆகஸ்ட் 15ஆம் தேதி ரூ.80.14 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.3.77 உயர்ந்து ரூ.83.91 ஆகவும், டீசல் விலை ரூ.72.59இல் இருந்து ரூ.4.39 உயர்ந்து ரூ.76.98 ஆகவும் அதிகரித்திருக்கிறது” என்று கூறியுள்ளவர், இதற்கு முன்பான காலங்களில் பெட்ரோல், டீசல் விலை எப்படி இருந்தது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“எரிபொருள் விலை உயர்வின் அடுக்கடுக்கான விளைவுகளால் அத்தியாவசியப் பொருட்கள் விலையும் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளன. இதனால் மக்கள் வாழ வழி தெரியாமல் தவிக்கின்றனர். இந்தக் கொடுமையிலிருந்து மக்களைக் காக்க வேண்டுமானால், எரிபொருள்கள் மீதான கலால் வரியை மத்திய அரசும், மதிப்புக் கூட்டு வரியை மாநில அரசும் குறைக்க வேண்டும். ஆனால், இரு அரசுகளும் வரியைக் குறைக்க மறுப்பது மக்களால் மன்னிக்க முடியாத மோசடி ஆகும்.

2014ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து 2016ஆம் ஆண்டின் தொடக்கம் வரை உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, அதன் பயன்களை மக்களுக்கு அளிக்க மத்திய அரசு மறுத்து விட்டது. மாறாக, பெட்ரோல் மீதான கலால் வரியை 11.77 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 13.47 ரூபாயும் உயர்த்தி அதன் பயன்களை மத்திய அரசு அனுபவித்தது.

கச்சா எண்ணெய் வீழ்ச்சிக்கு இணையாக எரிபொருள் விலையைக் குறைக்காமல், கலால் வரியை உயர்த்துவது குறித்து டெல்லியில் கடந்த 17.12.2015 அன்று செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரிகளை மத்திய அரசு ஒருகட்டத்தில் குறைக்கும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, அதன் சுமை மக்கள் மீது சுமத்தப்படும்போது இதை மத்திய அரசு செய்யும். எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் அளிப்பது மத்திய அரசின் கடமை ஆகும். அந்தக் கடமையை மத்திய அரசு செய்யும் என்று கூறினார்.

தர்மேந்திர பிரதான் இவ்வாறு கூறியதற்குப் பிறகும் பலமுறை கலால் வரி உயர்த்தப்பட்டது. அத்துடன் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்ததால் எரிபொருள் விலை விண்ணைத் தொட்டுள்ளது. 2015 ஆகஸ்ட் 15ஆம் தேதியுடன் ஒப்பிடும்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.20.42, அதாவது 32% அதிகரித்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.30.90, அதாவது 67 விழுக்காடு அதிகரித்துள்ளது. இவை நினைத்துப் பார்க்க முடியாத விலை உயர்வு ஆகும். இந்த உயர்வுக்குப் பிறகும் கலால் வரியை உயர்த்த மத்திய அரசுக்கு மனமில்லையென்றால் எப்போது தான் வரியைக் குறைக்கும்? பெட்ரோல், டீசல் விலை 150 ரூபாயை எட்டிய பிறகு குறைக்கலாம் எனக் காத்திருக்கிறதா? மக்கள் மீதான சுமையைக் குறைப்போம் என்று கூறிய அரசு அதை நிறைவேற்றாதது மோசடி அல்லவா?

2014, 2015 ஆகிய ஆண்டுகளில் கலால் வரி உயர்த்தப்பட்டதன் மூலமாக மட்டும் மத்திய அரசுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்குக் கூடுதல் வருவாய் கிடைத்தது. அதையும் சேர்த்து எரிபொருட்கள் மீதான வரிகள் மூலம் மட்டும் ஆண்டுக்கு மூன்றரை லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. இதனால் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ரூ.8 லட்சம் கோடி கூடுதல் வரி வருவாயும், சுமார் 12 லட்சம் கோடி மொத்த வரி வருவாயும் கிடைத்துள்ள நிலையில், மக்களை மேலும் சுரண்டி பணம் பறிக்க மத்திய அரசு துடிப்பது சரியல்ல. ஏற்கெனவே அளித்த வாக்குறுதியை மதித்து பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைத்து எரிபொருட்களின் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும்” என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon