மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

சிறப்புக் கட்டுரை: வேலை உருவாக்கம் என்னும் கட்டுக்கதை!

சிறப்புக் கட்டுரை: வேலை உருவாக்கம் என்னும் கட்டுக்கதை!

ப.சிதம்பரம்

ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதியில் ‘நேர்காணல்’ என்ற சொல்லுக்கு ஒரு பத்திரிகையாளருக்கும், ஒரு சமூக ஆர்வம் கொண்ட நபருக்கும் இடையே நடக்கும் நேர்முக உரையாடல் என்று விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதைக் கருத்தில்கொண்டு, இரண்டு வாரங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியின் நேர்காணல் என்று வெளியிடப்பட்டவை அனைத்தையும் நேர்காணல் என்றே கூற முடியாது. முன்பே கொடுக்கப்பட்டிருந்த கேள்விகளுக்குப் பிரதமர் பதிலளிக்கிறார். கேள்விகள் முன்னதாகவே தயாரிக்கப்பட்டனவா அல்லது பதில்கள் முன்னதாகவே தயாரிக்கப்பட்டனவா என்பதைக் கண்டறிவதே கடினமாக உள்ளது. பதில்கள் பிரமாதமாக இருந்தன. இன்னும் சொல்லப்போனால் மிகவும் பிரமாதமாக இருந்தன. நல்ல, முழுமையான வரிகள், நல்ல இலக்கணத்துடனான மொழி, நல்ல வாக்கிய அமைப்புடன் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் துண்டுப் பிரசுரங்களின் தகவல்களை அப்படியே பேசிவிட்டார்.

இந்தக் கட்டுரையில், பிரதமரின் பதில்களில் ஒரு பகுதியைப் பற்றி மட்டும் பேச விரும்புகிறேன். வேலைவாய்ப்புகள் குறித்த கேள்வி அது. இதுகுறித்து என்னிடம் அடிக்கடி கேள்வியெழுப்பப்படுகிறது. முக்கியமாக நான் டெல்லிக்குப் பயணிக்கும்போது இக்கேள்வியை நான் அதிகம் சந்திக்கிறேன். நிதின் கட்கரியின் வெளிப்படைத்தன்மையை நான் பாராட்டுகிறேன். எதையும் யோசிக்காமல் “வேலைகளே இல்லை” என்று அவர் கூறிவிட்டார்.

முத்ரா கடன் கட்டுக்கதை

மோடி தனது விவாதத்தில் பேசுகையில், “கடந்த நான்கு ஆண்டுகளில் 12 கோடி முத்ரா கடன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு முத்ரா கடனால் ஒரு வேலைவாய்ப்பு உருவாகியிருந்தாலும்கூட, 12 கோடி கடன்களால் 12 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்க வேண்டும்” என்று கூறினார். இந்தத் தகவல் உண்மையென்றால், அவரது பதிலைத் தாக்க முடியாது. ஆனால், ஒவ்வொரு முத்ரா கடனாலும் ஒரு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளதா?

முத்ரா கடன்கள் குறித்த தகவல்களைப் பார்க்கலாம். 2015-16ஆம் ஆண்டு முதல் 2018 ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை 13,37,85,649 கடன்கள் வங்கிகளால் கொடுக்கப்பட்டுள்ளன. மொத்தம் ரூ.6,32,383 கோடி கடன்களாக வழங்கப்பட்டுள்ளன. பார்ப்பதற்கு பிரமிக்கத்தக்கதாக இருந்தாலும், கடனின் சராசரி அளவைப் பார்த்தால் பிரமிப்பாக இல்லை. ஒரு நபருக்குச் சராசரியாக ரூ.47,268 மட்டுமே கடனாக வழங்கப்பட்டுள்ளது. ஒரு முத்ரா கடனால் ஒரு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளதாகப் பிரதமர் கூறுகிறார். ஆக, மூன்று ஆண்டு மற்றும் நான்கு மாதங்களில் 12 கோடி (13,37,85,649) வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்க வேண்டும். ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று மோடி உறுதியளித்திருந்தார். உறுதியளித்த எண்ணிக்கையை விடவும் கூடுதலான வேலைவாய்ப்புகள்தான் உருவாகியுள்ளன போலும்.

இதுகுறித்து ஒரு முடிவுக்கு வருவதற்குப் பல தடைகள் உள்ளன. முதலாவதாக, வேலை தேடுவோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் நான்கு கோடியாக உள்ளது. ஆக, 13 கோடி நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருந்தால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதலாவது ஆண்டு ஆட்சியிலேயே நாட்டிலுள்ள வேலையின்மை முழுமையாகத் துடைத்தெறியப்பட்டிருக்கும். இரண்டாவதாக, வேலையின்மை விகிதம் சுழியமாக இருக்க வேண்டும். ஆனால், 2017-18ஆம் ஆண்டில் வேலையின்மை விகிதமோ 4.7 விழுக்காடாக இருந்ததாக இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மூன்றாவதாக, 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் பதிவு செய்துள்ள 4,26,53,406 நபர்களின் கதையை என்னவென்று விளக்குவது? இறுதியாக, வேலைவாய்ப்பு பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 2017 ஜூலையில் 40.32 கோடியிலிருந்து 2018 ஜூலையில் 39.75 கோடியாகச் சரிந்துள்ளதே, இதை எப்படி விளக்குவது?

47,268 ரூபாயில் வேலைவாய்ப்புகள்

ரூ.47,268 கடன் தொகையை வைத்துக் கொண்டு ஒரு வேலைவாய்ப்பை உருவாக்க முடியாது என்பதே நிதர்சனம். அந்தத் தொகையை வைத்துக்கொண்டு மரச்சாமான்கள், ஏசி, ஃப்ரிட்ஜ் போன்ற சில பொருட்களை மட்டுமே வாங்க முடியும். அல்லது, அத்தொகையைக் கூடுதல் மூலதனமாக மட்டுமே பயன்படுத்த முடியும். அத்தொகையைக் கொண்டு கூடுதலாக ஒரு வேலைவாய்ப்பைக் கூட உருவாக்க முடியாது. குறைந்தபட்ச ஊதியத்துக்கு (மாதம் ரூ.3,000 என வைத்துக்கொள்வோம்) ஓர் ஊழியரைப் பணியமர்த்தினால் கூட, ரூ.47,268 கடன் தொகையைக் கொண்டு மாதம் ரூ.3,000 ஈட்டி அதை ஊழியருக்கு ஊதியமாக வழங்க முடியாது. ஒவ்வொரு முத்ரா கடனாலும் ஒரு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது என்ற பிரதமரின் கூற்றை ஒரு பொருளாதார வல்லுநரும் ஆதரிக்கவில்லை.

வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதில்லை என்பதே உண்மை நிலை. அதற்குப் போதிய அனுபவ ரீதியான ஆதாரங்கள் உள்ளன. இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் நடத்திய ஆய்வில், வேலைவாய்ப்பு பெற்ற நபர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளதாகத் தெரியவருகிறது. மேலும், கூடுதல் முதலீடுகளாலும், அதிகரிக்கப்பட்ட கடன்களாலும் வேலைவாய்ப்புகள் உருவாகும். ஆனால், முதலீடும், கடன்களும் வாடி வருகின்றன. மொத்த மூலதன உருவாக்கமோ 2011-12ஆம் ஆண்டில் 31.3 விழுக்காட்டிலிருந்து 2013-14ஆம் ஆண்டில் 28.5 விழுக்காடாகக் கடந்த மூன்று ஆண்டுகளில் சரிந்துள்ளது. அதுபோக, 2017-18ஆம் ஆண்டில் அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும், புதிய முதலீட்டுத் திட்டங்களை அறிவிப்பது 38.4 விழுக்காடு சரிந்துள்ளது. புதிய திட்டங்களை நிறைவு செய்வது 26.8 விழுக்காடு சரிந்துள்ளது. கடன் வளர்ச்சிக்கு அண்மை மாதங்களில் புத்துயிர் கிடைத்துள்ளது போலத் தெரிகிறது. எனினும், கடந்த ஜூன் மாத நிலவரப்படி, வருடாந்திரக் கடன் வளர்ச்சி தொழிற்துறைக்கு 0.9 விழுக்காடாகவும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 0.7 விழுக்காடாகவும் மட்டுமே உள்ளது. 2015 மார்ச் மாதத்துக்கும், 2018 மார்ச் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் முத்ரா திட்டத்தின் கீழ் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களின் மதிப்பு ரூ.5,04,564 கோடியிலிருந்து ரூ.4,76,679 கோடியாகச் சரிந்துள்ளது.

பல்வேறு இடங்களில் என்னுடன் உரையாடியவர்கள் மற்றும் என் உரையைக் கேட்டவர்களிடம், அவர்கள் தங்களது தொழிலில் கூடுதலாக ஓர் ஊழியரையாவது இணைத்துள்ளனரா என்று வினவினேன். தூத்துக்குடி, தானே, கோலாப்பூர், நாசிக் என எந்த இடமாக இருந்தாலும் ஒருவர் கூட ஊழியரை இணைத்ததாகப் பதிலளிக்கவில்லை.

ரூ.2000 கோடி விற்றுமுதல் பெறும் கட்டுமான நிறுவனம் ஒன்றில் வடிவமைப்பாளர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள், பொறியாளர்கள் எனப் பலர் பணிபுரிகின்றனர். பத்து நாட்களுக்கு முன்பு அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் என்னிடம் பேசுகையில், கூடுதல் ஊழியர்களை இணைப்பதற்குப் பதிலாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களை வெளியேற்றியுள்ளதாகக் கூறினார். இந்தியாவில் உருவாகும் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை குறித்த காலாண்டு வாரியான தகவல்களை வெளியிடுவதை நிறுத்தும்படி தொழிலாளர் ஆணையத்தை அரசு கேட்டுக்கொண்டுள்ளது. எதற்காக? ஊழியர் சேமலாப நிதிய அமைப்பு (EPFO), ஊழியர் காப்பீட்டுக் கழகம் (ESIC), புதிய ஓய்வூதியத் திட்டம் போன்றவற்றின் ஆட்சேர்க்கை விவரங்களைக் கொண்டு வேலைவாய்ப்புத் தகவல்களை அரசு வெளியிட்டு வருகிறது? இந்தக் குளறுபடியான விவரங்களைப் பல பொருளாதார வல்லுநர்களும், புள்ளியியலாளர்களும் கிழித்தெறிந்துள்ளனர்.

நாட்டின் மனநிலையே எல்லாவற்றுக்கும் ஒரு பெரும் சாட்சியாகும். மக்களின் உச்சபட்ச பிரச்சினையே வேலைவாய்ப்புகள்தான் என்று எல்லா ஆய்வுகளும் கூறுகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி குறித்த விவரங்களால் மக்கள் குழப்பமடையவில்லை. வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படாமலும்கூட சாதாரணமான வளர்ச்சி ஏற்படும் என்பதை மக்கள் புரிந்து வைத்திருக்கின்றனர். ஆனால், அதைப் பிரதமர்தான் புரிந்து வைத்திருக்கவில்லை. ‘வேலையில்லா வளர்ச்சி’ என்னும் குண்டு வெடிக்கக் காத்திருக்கிறது.

கட்டுரையாளர் குறிப்பு

ப.சிதம்பரம், முன்னாள் மத்திய நிதியமைச்சர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்.

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

தமிழில்: அ.விக்னேஷ்

முந்தைய கட்டுரை: இயற்கை முறைக்குத் திரும்பும் நிறுவனங்கள்!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon