மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

மாற்றம் தரும் திறன் விளையாட்டுகள்..!

மாற்றுத்திறனாளியை நீங்க எப்படி எதிர்கொள்வீங்க குட்டீஸ்..? அவங்களோட வாழ்க்கையின் ஐந்து நிமிஷம் எப்படிப்பட்டதுன்னு நாம எப்பாவாச்சும் உணர்ந்திருக்கோமா? நாம இன்னிக்கு பார்க்கப்போற விளையாட்டுகள் மூலமா அவர்களோட வாழ்க்கை எவ்வளவு சவாலாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்குன்னு தெரிஞ்சுக்கப்போறோம்.

நொண்டி, கண்ணாமூச்சி, உரியடி போன்ற விளையாட்டுகள் எல்லாம் நீங்க கேள்விப்பட்டவைதான் குட்டீஸ். அதோட விளையாட்டு முறைகளை உங்களுக்கு சொல்லிக்கொடுத்தா போதும். ஆனா, இவை நமக்குச் சொல்லும் சேதிகள் ஏராளம். விளையாட்டைவிட அந்தச் செய்திகளை இன்னிக்கு நாம தெரிஞ்சுக்கலாம் நண்பர்களே...

நொண்டி

ஒரு வட்டம் அல்லது சதுரம் வரைஞ்சிக்கணும். அதுக்குள்ள எல்லாரும் நின்னுக்கணும். அவுட் ஆனவங்க ஒரு காலை தூக்கிட்டு, மறு காலில் குதித்துக் குதித்து வந்தபடி மத்தவங்களைத் துரத்தணும். யாராவது வட்டத்தை விட்டு வெளிய போனா அவுட். இல்ல நொண்டியடித்து வருபவர் தொட்டாலும் அவுட்.

அவுட் ஆனவங்க அந்த இடத்தைவிட்டு வெளியேறிடணும். எல்லாரையும் வெளியேத்துற வரைக்கும் விளையாட்டு தொடரும்.

நொண்டியடித்தபடியே ஓடுவதும், கடைசி ஆளைத் தொடும் வரைக்கும் விடாமுயற்சியோட துரத்துவதும் மன வலிமையையும், உடல் வலிமையையும் அதிகரிக்கும்.

கண்ணாமூச்சி, உரியடி

இவை இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவைதான். கண்ணாமூச்சியில் கண்ணைக் கட்டிக்கொண்டு சுற்றியிருப்பவர்களைச் சத்தத்தை வைத்தே அடையாளம் கண்டுபிடிக்கணும். உரியடில உரியை ஒருமுறை பார்த்துவிட்டு, அடுத்து கண்ணைக் கட்டி சுத்திவிட்டதுக்கப்புறம் சரியான திசையைக் கண்டுபிடிச்சு பானையை உடைக்கணும்.

இந்த விளையாட்டுகள் விளையாடும்போது, குறைஞ்சது அஞ்சு நிமிஷமாவது நாம கால் இல்லாமலும், பார்வை இல்லாமலும் பரிதவிச்சிருப்போம். அந்த அஞ்சு நிமிஷமே நமக்கு மிகப் பெரிய சவாலா இருக்கும்போது, வாழ்க்கையே அப்படித்தான்னு வாழ்ந்திட்டிருக்க கண் பார்வை இழந்த, கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளின் சவாலான ஒவ்வொரு நாளையும் நாம நினச்சு பார்க்கணும்.

அது எவ்வளவு கொடுமையானதுன்னு நாம புரிஞ்சிக்குற அந்த சமயம், அவங்களோட வாழ்க்கையை மேம்படுத்த உதவணும் என்ற உறுதியை எடுக்கணும்.

நம் வாழ்வின் லட்சியம் என்னவாக இருந்தாலும், அதன் பயன்களை மத்தவங்களும் அனுபவிக்குமாறு வாழணும்.

- நரேஷ்

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon