மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 16 ஜூலை 2020

கேரள வெள்ளம்: உயரும் தேங்காய் உற்பத்தி!

கேரள வெள்ளம்: உயரும் தேங்காய் உற்பத்தி!

கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களில் பெய்த கனமழையால் அம்மாநிலத்தின் தேங்காய் உற்பத்தி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பால் அம்மாநிலத்தின் தோட்டக்கலை உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயம், கால்நடை வளர்ப்பு, பண்ணைத் தொழில் ஆகிய அனைத்தும் முடங்கியது. தற்போது நிலைமை சீராகியிருந்தாலும் ரூ.20,000 கோடிக்கு மேலான வேளாண் இழப்புகள் கேரளாவுக்கு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் தேங்காய் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் கேரளாவில் ஏற்பட்டுள்ள இந்த வெள்ள பாதிப்பால் தென்னை மரங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு சற்றுக் குறைவுதான் என்கிறார் தேங்காய் மேம்பாட்டு வாரிய புள்ளியியல் அதிகாரியான வி.சி.வசந்தகுமார்.

எகனாமிக் டைம்ஸ் ஊடகத்திடம் இதுகுறித்து அவர் பேசுகையில், “மலப்புரம், கோழிக்கோடு, காசர்கோடு ஆகிய மூன்று மாவட்டங்கள்தான் கேரளாவின் தேங்காய் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மலப்புரத்தில் தென்னை மரங்கள் சற்று பாதிக்கப்பட்டிருந்தாலும் இதர பகுதிகளில் சேதம் அவ்வளவு அதிகமாக இல்லை. கனமழை பெய்துள்ளதால் தேங்காய் உற்பத்தி கட்டாயம் அதிகரிக்கும். திருவனந்தபுரம் மற்றும் கண்ணூர் ஆகிய பகுதிகளிலும் பாதிப்பு மிகக் குறைவே. தற்போது இளநீர் (தேங்காய்) விலை ரூ.10 வரை குறைந்துவிட்டது. இருந்தாலும் வரும் நாட்களில் தேவை அதிகரித்து இளநீரின் விலை உயரும். சபரிமலை சீசனில் தேங்காய்களுக்கான தேவை மீண்டும் உயரும்” என்று தெரிவித்துள்ளார்.

2016-17ஆம் நிதியாண்டில் இந்தியா உற்பத்தி செய்த 2,390 கோடி தேங்காய்களில், 744.8 கோடி தேங்காய்கள் கேரளாவில் விளைந்தவை என்று தேங்காய் மேம்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon