மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

கேந்திரிய வித்யாலயா முதல்வரை நீக்க உத்தரவு!

கேந்திரிய வித்யாலயா முதல்வரை நீக்க உத்தரவு!

பாலியல் புகாருக்கு உள்ளான திருவண்ணாமலை கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் குமார் தாகூரை நீக்க, நேற்று (செப்டம்பர் 10) மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த ஆண்டு பெங்களூரு கேந்திரிய வித்யாலயா பள்ளியின் முதல்வராகச் செயல்பட்டவர் குமார் தாகூர். இவர் பொருளாதாரத்தில் பின்தங்கிய பள்ளி மாணவிகளைக் குறிவைத்து அவர்களிடம் அத்துமீறி நடந்ததாகவும், ஆலோசனை என்ற பெயரில் மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இவர், அங்கிருந்த ஆசிரியர்களுக்கும் கீழ்த்தரமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகக் கூறப்பட்டது. அவர்கள் ஒத்துழைக்க மறுப்பு தெரிவித்தாலோ, புகார் கொடுப்பேன் எனக் கூறினாலோ, சம்பளத்தைக் கொடுக்க மாட்டேன் என மிரட்டியதாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து விசாரிக்க, அப்பள்ளியிலேயே ஒரு குழு அமைக்கப்பட்டது. பின்னர் விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டார் தாகூர். அதன்பின் போக்சோ, ஐபிசி 353 (A) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.

அவர் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், அந்த வழக்கு விசாரணை கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளியின் முதல்வராகப் பணியமர்த்தப்பட்டார் குமார் தாகூர். அப்பள்ளி இணையத்தளத்தின் முகப்புப் பக்கத்தில், அவர் பணியில் இருந்து வரும் புகைப்படம் ஆகஸ்ட் 13ஆம் தேதியிலிருந்தே இடம்பெற்றுள்ளது.

தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த தாகூர், இது துறை ரீதியான முடிவு என்றார். இதனை யாரேனும் பிரச்சினை எனக் கருதினால், அது அவர்களின் தனிப்பட்ட கருத்து என்றும் தெரிவித்தார்.

குற்றச்சாட்டுகளுக்குப் பின்னர் குமார் தாகூர் பணியமர்த்தப்படுவது இது முதன்முறையல்ல. முன்னதாக கார்வார் கிளை கேந்திரிய வித்யாலா பள்ளிக்கு அவர் மாற்றம் செய்யப்பட்டார். இது தொடர்பாக கர்நாடக மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பிற்கான ஆணையம் கேந்திரிய வித்யாலயா ஆணையருக்கு சம்மன் அனுப்பியது. இதற்குப் பதிலளித்த கேந்திரிய வித்யாலயா துணை ஆணையர், “விதிகளின்படி, புகாருக்குள்ளான முதல்வர் குற்றம்சாட்டப்பட்ட இடத்திற்கு அருகாமையில் தங்க அனுமதிக்கக் கூடாது.சாட்சிகளுடன் அவர் தொடர்பில் இருக்கவும் கூடாது. அதனையடுத்து, கார்வாரில் உள்ள பள்ளிக்கு மாற்றினோம். முதலில் அவரை விடுமுறையில் செல்ல கேட்டுக்கொண்டோம். பின்னர் அதனை திரும்பப் பெற்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தைச் சேர்ந்த கிர்பா ஆல்வா இதுகுறித்து கூறுகையில், “குமார் தாகூர் பணியிட மாற்றம் சட்டபூர்வமானதல்ல. நீதிமன்றத்தால் விடுவிக்கப்படும்வரை அவர் எந்தப் பதவியிலும் நீடிக்கக் கூடாது. தற்போது மீண்டும் மாணவர்களுக்கு முதல்வராக வந்துள்ளார். இதன் மூலம் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதை நாங்கள் எதிர்க்கிறோம். கேந்திரிய வித்யாலயா இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், நேரடியாக நாங்கள் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்குக் கடிதம் எழுதுவோம்” என்றார்.

இவரின் பணி நியமனத்திற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது பெரிய அளவில் விவாதப் பொருளானது. இதனால், பாலியல் புகாருக்கு உள்ளான திருவண்ணாமலை கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் அம்மாவட்ட ஆட்சியரால் நீக்கப்பட்டுள்ளார். பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon