மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 1 ஜுன் 2020

விண்வெளிப் பயணம்: ஆடைகள் தயார்!

விண்வெளிப் பயணம்: ஆடைகள் தயார்!

விண்ணுக்குச் செல்ல உள்ள வீரர்களுக்காகப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ள ஆடைகள் பெங்களூருவில் நேற்று காட்சிக்கு வைக்கப்பட்டன.

2022ஆம் ஆண்டு விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் குறித்து, கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று நடந்த 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்ட உரையில் குறிப்பிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, அதற்கான வேலைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, விண்ணுக்குச் செல்லும் மனிதர்களுக்கென்று பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட ஆடையைப் பெங்களூருவில் காட்சிப்படுத்தியுள்ளனர்.

மூன்று மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இத்திட்டத்தில், தற்போது இரண்டு ஆடைகளைத் தயாரித்துள்ளனர். இன்னோர் ஆடையைத் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, திருவனந்தபுரத்தில் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் ஆரஞ்சு நிறத்தில் முன்மாதிரியைத் தயாரித்து வந்தனர். தற்போது இந்த ஆடையை பெங்களூரில் நடைபெற்று வரும் விண்வெளிக் காட்சியில் வைத்துள்ளனர்.

இந்த ஆடையில் ஓர் ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளது. இதன்மூலம், விண்வெளியில் 60 நிமிடங்கள் சுவாசிக்க முடியும். விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூன்று விண்வெளி வீரர்கள் கொண்ட விண்கலமானது, பூமியில் இருந்து 400 கிமீ தொலைவில் உள்ள கோளப்பாதையை அடைய 16 நிமிடங்கள் எடுக்கும். மீண்டும் பூமிக்கு அடைய 36 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். குஜராத் பகுதியிலுள்ள அரேபியக் கடலில் இந்த விண்கலம் தரையிறங்கும். இந்தியக் கடற்படை மற்றும் கடலோரக் காவல் படை வீரர்கள் இந்த விண்கலத்தை மீட்கத் தயாராக இருப்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon