மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 24 செப் 2020

சிதம்பரத்துக்குப் பதிலடி கொடுத்த தமிழிசை

சிதம்பரத்துக்குப் பதிலடி கொடுத்த தமிழிசை

பொருளாதார வளர்ச்சி விகிதம் தொடர்பாக ப.சிதம்பரம் கூறியுள்ள கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், மன்கோகன் சிங் காலத்தைவிட தற்போது பொருளாதாரம் நிலையாகவே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டத்துக்கு (பாரத் பந்த்) காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. பந்த்துக்குப் பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் நேற்று (செப்டம்பர் 10) நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது.

இந்த முழு அடைப்பு போராட்டம் தொடர்பாக பாஜக, காங்கிரஸ் இரு தரப்பினரும் மாறி மாறி குற்றம்சாட்டிக் கொண்டனர். இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அரசு பொறுப்பில்லை என்று பாஜக கூறுவது இந்த ஆண்டின் மிகப் பெரிய நகைச்சுவை. பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு விதித்துள்ள கொடுமையான வரிகள்தான் விலை உயர்வுக்குக் காரணம் என்பதைச் சிறு பிள்ளைகள் கூட அறிவார்கள்” என்று கூறியிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக தமிழிசை செளந்தரராஜன் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியப் பொருளாதார வளர்ச்சி என உலக வங்கி முதல் பன்னாட்டு நிதி ஆய்வறிக்கைகள் வரை சொல்லியும் ப.சி தவறான விவரம் என்கிறார். பொருளாதாரம் இங்கு சீர்குலையவில்லையே என்ற ஏமாற்றமா? பொருளாதார நிபுணர் மன்மோகன் காலத்தைவிடப் பொருளாதாரம் நிலையாகவே உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யக்கோரிய அமலாக்கத் துறையின் மனு குறித்து கார்த்திக் சிதம்பரம் பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இச்செய்தியைக் குறிப்பிட்டுள்ள தமிழிசை, “வெளிநாட்டு சொத்துக்கணக்கில் தவறான தகவல் தந்ததால்... இதைத்தான் தவறான புள்ளிவிவரம் என்கிறாரா ப.சி?” என்று கிண்டலடித்துள்ளார்.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon