மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 16 ஜூலை 2020

ஷாலினியின் சக்சஸ் ஃபார்முலா!

ஷாலினியின் சக்சஸ் ஃபார்முலா!

ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகிவரும் 100% காதல் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பு பெற்றுவருகிறது.

தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்த அந்தப் படம் மொழி கடந்து தென்னிந்தியத் திரையுலகம் முழுவதிலும் கவனம் பெற்றது. படத்தில் நடித்திருந்த விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே இருவருக்கும் பெருவாரியான ரசிகர்களைப் பெற்றுத்தந்தது அந்த படம். விஜய் தேவரகொண்டா தமிழில் கதாநாயகனாக 'நோட்டா' திரைப்படம் மூலம் அறிமுகமாக உள்ள நிலையில் ஷாலினி பாண்டே '100% காதல்' மூலம் களம் காண்கிறார்.

இளைஞர்களைக் கவரும் விதத்தில் காதல், லிவிங் டு கெதர் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படங்கள் சமீப காலங்களில் நல்ல வரவேற்பு பெற்றுவருகின்றன. அர்ஜுன் ரெட்டி திரைப்படமும் அந்த வகையைச் சேர்ந்த படம்தான். தமிழிலும் இத்தகைய படங்களுக்கு வரவேற்பு உள்ளதை சமீபத்தில் வெளியான 'பியார் பிரேமா' காதல் வரை பல படங்கள் மூலம் அறியலாம். 100% காதல் படத்தின் டீசரைப் பார்க்கும்போது அந்த வரையறைக்குள் கச்சிதமாக உருவாகியுள்ளதை உணரமுடிகிறது.

முன்னணி இயக்குநர்களின் படங்களில் இணைந்து சமீபகாலமாக சீரியஸான கதாபாத்திரங்களில் ஜி.வி.பிரகாஷ் நடித்துவருகிறார். இந்த படம் மூலம் 'டார்லிங்', 'த்ரிஷா இல்லன்னா நயன்தாரா' ஆகிய படங்களில் நடித்த ஜி.வியை இந்த படத்தில் பார்க்கலாம்.

பதின்பருவ ஜோடிக்குள் மலரும் காதலை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் நாக சைதன்யா, தமன்னா இணைந்து நடித்த ‘100% லவ்’படத்தின் ரீமேக்காக உருவாகிவரும் இந்த படத்தை சந்திரமௌலி இயக்குகிறார். சுகுமார், புவனா சந்திரமௌலி இணைந்து தயாரிக்கின்றனர். நாசர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜி.வி.இசையமைக்கிறார்.

100% காதல் டீசர்

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon