மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

ராஜினாமா செய்யத் தயார்: வேலுமணி

ராஜினாமா  செய்யத் தயார்: வேலுமணி

தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் நிரூபித்தால் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டும் சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சியின் ஒப்பந்த பணிகளை வழங்கியுள்ளதாக டைம்ஸ் நவ் ஊடகம் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டிருந்தது. இதையடுத்து வேலுமணி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அலுவலகத்தில் அவர் மீது திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் இன்று (செப்டம்பர் 11) செய்தியாளர்களைச் சந்தித்த உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, “தமிழக அரசைக் கவிழ்க்க வேண்டும் என்று திமுக பல்வேறு முயற்சிகளை செய்துவருகிறது. முதல்வர், துணை முதல்வரைத் தொடர்ந்து தற்போது என்மீது ஊழல் புகார் கொடுத்துள்ளனர்.

சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த எனக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் நிர்வகித்த உள்ளாட்சித் துறை வழங்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை சிறப்பாகச் செயல்படுகிறது. அதிமுக அரசைக் கலைக்க வேண்டும், கட்சியை முடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தவறான கருத்துக்களை எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன. எனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி எந்த ஒப்பந்தத்தையும் வழங்கவில்லை. என் மீதான ஊழல் குற்றச்சாட்டை ஸ்டாலின் நிரூபித்துவிட்டால், நான் பதவி விலகத் தயார். அது மட்டுமின்றி, அரசியலிலிருந்தே விலகிவிடுகிறேன்.

அப்படி ஒருவேளை நிரூபிக்காவிட்டால், ஸ்டாலின் அவரது எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் திமுக தலைவர் பதவியை துறந்து, அழகிரிக்கோ அல்லது குடும்பத்தைச் சார்ந்த வேறொருவருக்கோ பதவியைத் தர வேண்டும்” என்று சவால் விடுத்துள்ளார்.

மேலும், “செய்தியாளருக்கு உறுதுணையாக அரசு இருந்துவருகிறது. பெண் செய்தியாளருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.

உள்ளாட்சித் துறையில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக மத்திய அரசு 6 விருதுகளைத் தமிழகத்துக்கு தந்துள்ளது என்றும் வேலுமணி குறிப்பிட்டார்.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon