மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 1 ஜுன் 2020

சர்க்கரை உற்பத்தியில் முன்னேறும் இந்தியா!

சர்க்கரை உற்பத்தியில் முன்னேறும் இந்தியா!

சர்வதேச அளவில், சர்க்கரை உற்பத்தியில் பிரேசிலைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடத்தைப் பிடிக்கவுள்ளது.

உலகளவில் சர்க்கரை உற்பத்தியில் பிரேசிலுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. ஆனால், விரைவில் பிரேசிலை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடத்தைப் பிடிக்கவுள்ளது. அக்டோபர் முதல் தொடங்கவிருக்கும் அடுத்த சந்தைப்படுத்துதல் ஆண்டில் இந்த மாற்றம் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடந்த ஆண்டில் இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 32.3 மில்லியன் டன்னாக இருந்தது. நடப்பு ஆண்டில் இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 33 முதல் 35 மில்லியன் டன் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் கரும்பு உற்பத்திக்காக உருவாக்கப்பட்டுள்ள மானியத் திட்டங்களால் சர்க்கரை உற்பத்தி மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பிரேசிலில் கரும்புகளை எத்தனால் உற்பத்திக்குப் பயன்படுத்துவதற்காக சர்க்கரை ஆலைகள் ஒதுக்கி வருகின்றன. 1990ஆம் ஆண்டு முதல் சர்க்கரை உற்பத்தியில் பிரேசில் முதலிடத்தில் இருந்து வருகிறது. ஆனால் தற்போது முதலீடுகள் குறைந்துள்ளதால் கரும்பு உற்பத்தியில் குறைபாடு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் பிரேசிலின் சர்க்கரை உற்பத்தி 40 மில்லியன் டன்னாக இருந்தது. மதிப்பீடுகளின் அடிப்படையில், பிரேசிலின் சர்க்கரை உற்பத்தி 10 மில்லியன் டன் குறைந்து 30 மில்லியன் டன்னாகச் சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இக்ரா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2018ஆம் சந்தைப்படுத்துதல் ஆண்டில் இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 10 விழுக்காடு அதிகரித்து 35 மில்லியன் டன்னாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் உள்நாட்டுச் சர்க்கரை தொழிற்துறையில் அதீத உற்பத்தி சூழல் நிலவுகிறது. சர்வதேசச் சந்தையில் உள்நாட்டு விலையை விடக் குறைவான விலையில் சர்க்கரை விற்பனை செய்யப்படுவதால், இந்தியா தனது உபரி உற்பத்தியை ஏற்றுமதி செய்யவும் முடியாமல் தவித்து வருகிறது.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon