மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 26 மே 2020

குட்கா ஊழல்: காவல் அதிகாரிகளுக்கு சம்மன்!

குட்கா ஊழல்: காவல் அதிகாரிகளுக்கு சம்மன்!

குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக டிஎஸ்பி மன்னர்மன்னன், இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோருக்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

குட்கா ஊழல் விவகாரத்தில் குட்கா குடோன் உரிமையாளர் மாதவ ராவ், பங்குதாரர்களான உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ், மத்திய கலால் துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன், உணவுத் துறை அதிகாரி செந்தில் முருகன் உள்ளிட்ட ஐந்து பேரை கடந்த 5ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அன்றைய தினமே அவர்கள் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வரும் 20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ சார்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவர்களை வரும் 14ஆம் தேதிவரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 5பேரிடமும் இரண்டாவது நாளாக இன்று சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி காவல் அதிகாரிகள் மன்னர்மன்னன், சம்பத் ஆகியோருக்கு இன்று (செப்டம்பர் 11) சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.விசாரணைக்காக சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள சிபிஐ அலுவலகத்தில் நாளை ஆஜராகும்படி சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக தமிழக காவல் துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்புவது இதுதான் முதல்முறை.

குட்கா ஊழல் தொடர்பாக கடந்த 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் சிபிஐ சோதனை நடத்திய நிலையில், இவர்கள் இருவரின் இல்லத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

தற்போது மதுரையில் ரயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வரும் மன்னர்மன்னன், குட்கா ஊழல் நடந்த சமயத்தில் புழல் உதவி கமிஷனராக பணியாற்றினார். மேலும் செங்குன்றத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சம்பத், தற்போது தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்துவருகிறார்.

இதற்கிடையே சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ள உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில்முருகன், கலால் துறை அதிகாரி பாண்டியன் ஆகியோர் ஜாமீன் வழங்கக் கோரி இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon