மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

பெட்ரோல் 55 ரூபாய் ஆக கட்கரி சொல்லும் யோசனை!

பெட்ரோல் 55 ரூபாய் ஆக கட்கரி சொல்லும் யோசனை!

“உயிரி எரிபொருட்களின் பயன்பாடு அதிகரிக்க ஆரம்பித்தால் இந்தியாவில் டீசல் லிட்டருக்கு ரூ.50க்கும், பெட்ரோல் ரூ.55க்கும் கிடைக்கும்” என்று மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் நேற்று நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. இந்நிலையில் உயிரி எரி பொருட்களை பயன்படுத்தினால் பெட்ரோல், டீசல் விலை குறையும் என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கரில் நேற்று (செப்டம்பர் 10) நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய நிதின் கட்காரி, “சத்தீஸ்கரில் நெல், கோதுமை, சிறுதானியங்கள் மற்றும் கரும்பு மிகவும் சிறப்பாக உள்ளது, இதனால் இம்மாநிலம் உயிரி எரிபொருள் உற்பத்தியில் முக்கிய மையமாக உருவெடுக்க முடியும். ஜாத்ரோபாவில் உள்ள உயிரி எரிபொருள் உற்பத்தி மையத்திலிருந்து எடுக்கப்பட்ட எரிபொருள் முதன் முதலாக விமானத்திற்கு வழங்கப்பட்டது. இந்த உயிரி எரிபொருளால் இயங்கும் விமானம் டெல்லிக்கும் சென்றது. உயிரி எரிபொருள் உற்பத்தியின் மையமாக சத்தீஸ்கர் உருவாகினால் விவசாயிகள், பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்” என்று தெரிவித்தார்.

“உயிரி தொழில் நுட்பம் தொடர்பான ஆய்வினை மேற்கொள்வதற்கு ராஞ்சியில் மையம் ஒன்றை அமைக்க வேண்டும். எத்தனால், மெத்தனால், உயிரி எரிபொருள் பயன்பாட்டை தொடங்கினால் பெட்ரோலியத்தை நம்பியிருப்பது குறையும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் குறையும்” என்று தெரிவித்த நிதின் கட்கரி, மேலும், “ ரூ. 8 லட்சம் கோடிக்கு நாம் பெட்ரோல் மற்றும் டீசலை இறக்குமதி செய்கிறோம். விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கிறது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது. விவசாயிகள், ஆதிவாசிகள் மற்றும் மலைவாழ் மக்களால் நாட்டில் எத்தனால், மெத்தனால் மற்றும் உயிரி எரிபொருளை உருவாக்க முடியும் என்று நான் 15 ஆண்டுகளாக கூறி வருகின்றேன். உயிரி எரிபொருளைப் பயன்படுத்தி முதன்முதலாக நாம் விமானத்தை இயக்கியுள்ளோம். இதுபோன்று பஸ், ஆட்டோ, வாடகை கார், போன்றவற்றுக்கு எத்தனால், உயிரி எரிபொருள் கட்டாயம் ஆக்கப்படும். இது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது” என்று குறிப்பிட்டார்.

“பெட்ரோலிய அமைச்சகம் 5 எத்தனால் ஆலைகளை அமைத்து வருகிறது. இதனால் நெல், கோதுமை, கரும்பு கழிவுகளில் இருந்து எரிபொருள் தயாரிக்கப்படும். இது சாத்தியமானால் இந்தியாவில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.50க்கும், பெட்ரோல் விலை ரூ.55க்கும் கிடைக்கும்” என்றும் நம்பிக்கை தெரிவித்தார் நிதின் கட்கரி.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon