மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

மரகதச் சிலை: ஐஜி பதிலளிக்க உத்தரவு!

மரகதச் சிலை: ஐஜி பதிலளிக்க உத்தரவு!

புதுக்கோட்டையில் ராஜேந்திர சோழன் நிறுவிய பச்சை மரகத அம்மாள் சிலை மாயமான சம்பவம் தொடர்பாக, வரும் 2௦ஆம் தேதிக்குள் ஐஜி பொன்மாணிக்கவேல் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த எம்.ஆனந்த் மோகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். “புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகரணம் என்ற ஊரில் ஹகோகரணேஸ்வரர்-பிரகதாம்பாள் திருக்கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன், 3 அடி உயரம் கொண்ட பச்சை மரகதக் கல்லால் ஆன ஸ்ரீ பிரகதாம்பாள் சாமி சிலை செய்து, இந்தக் கோவிலில் வைத்தார்.

புதுக்கோட்டையை ஆண்ட ஸ்ரீ மார்த்தாண்ட பைரவ தொண்டைமான், இந்த சிலையை எடுத்துவிட்டு, அதற்குப் பதில் கிரானைட் கற்களால் ஆன மாற்றுச் சிலையை செய்து கோவிலில் வைத்துவிட்டார்.

அதேநேரம், அந்த பச்சை மரகதச் சிலையை திருச்சியில் உள்ள அரசுகளுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில், ஒரு இடத்தில் புதைத்து வைத்தார் தொண்டைமான். அந்த விலை மதிக்க முடியாத பச்சை பிரகதாம்பாள் சிலை, பூமியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு விட்டது. அந்த சிலை புதைக்கப்பட்ட நிலம், தற்போது கார்த்திக் தொண்டைமானுக்குச் சொந்தமானதாக உள்ளது.

எனவே, மாயமான சிலை குறித்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் கடந்த 2013ஆம் ஆண்டு 2 முறையும், கடந்த ஜூன் மாதமும் புகார் செய்தேன். ஆனால், இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, என் புகார் மீது வழக்குப் பதிவு செய்து, விலை மதிக்க முடியாத பச்சை பிரகதாம்பாள் சாமி சிலையை மீட்கும்படி ஐஜி பொன்மாணிக்கவேலுக்கு உத்தரவிட வேண்டும்” என்று அவர் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு இன்று (செப்டம்பர் 11) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கோபால கிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, சிலைக் கடத்தல் பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் வருகிற 20ஆம் தேதிக்குள் இந்த மனுவுக்குப் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon