மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

எட்டுவழிச் சாலை திட்டம்: ஏன் தடை விதிக்கக் கூடாது?

எட்டுவழிச் சாலை திட்டம்: ஏன் தடை விதிக்கக் கூடாது?

நிலம் அளவிடும் பணிகள் அனைத்தும் சட்ட விரோதமாக நடைபெறுவதால் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு ஏன் தடை விதிக்கக் கூடாது? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னை முதல் சேலம் வரை 277 கிமீ தொலைவிற்கு எட்டு வழிச்சாலை அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டு, அதற்காக நிலம் அளவிடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சேலம், திருவண்ணாமலை, தருமபுரி, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களிலும் இப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதற்கு பொதுமக்களும், எதிர்க்கட்சியினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். போராட்டங்களும் நடைபெற்றுவருகின்றன.

எட்டுவழிச் சாலை திட்டத்தை எதிர்த்து விவசாயிகள், நில உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பினரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்புராயன் அமர்வில் விசாரணையில் இருந்துவருகிறது.

இவ்வழக்குகள் இன்று (செப்டம்பர் 11) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, திட்டத்திற்கான நில அளவை பணிகள் நடந்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர்கள் தரப்பில், கல்வராயன் மலைப் பகுதியில் 500 மரங்கள் வெட்டப்பட்டதாக புகைப்பட ஆதாரங்களோடு புகார் தெரிவிக்கப்பட்டது. நில அளவீடு பணியின்போதே நிலம் கையகப்படுத்துவது, மரங்களை வெட்டுவது என அனைத்தும் சட்ட விரோதமாக நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு தரப்பிலிருந்து நீதிபதிகளிடம் ஒரு அறிக்கை வழங்கப்பட்டது.

அதில், தனியார் நிலத்தினை பல சர்வே எண்களாக பிரித்து அரசு பெயரில் ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ஒரு மரத்தை வெட்ட அனுமதி வாங்கி விட்டு, 150 மரங்களை வெட்டுவதா எனவும் கேள்வி எழுப்பினர்.

“நிலம் அளவிடும் பணிகளின் போது நிலம் கையகப்படுத்துதல், சாலை செல்வதாக கூறி சட்ட விரோதமாக சர்வே எண் பிரிப்பது, மரங்களை வெட்டுவது, மரம் வெட்ட நில உரிமையாளர்களை மிரட்டுவது என அனைத்தையும் மாநில அரசு சட்ட விரோதமாக செய்கிறது” என்று வேதனை தெரிவித்த நீதிபதிகள், இந்த திட்டத்திற்கு ஏன் தடை விதிக்கக் கூடாது என கேள்வியும் எழுப்பினர்.

வரும் 14ஆம் தேதிக்குள் மரம் வெட்டியது குறித்தும், நிலம் கையகப்படுத்தியது குறித்தும் தமிழக அரசு ஆவணங்களை தாக்கல் செய்யவும், சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்பது குறித்தும் பதிலளிக்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை வரும் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon