மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 16 ஜூலை 2020

தெலங்கானா: பேருந்து விபத்தில் 52 பேர் பலி!

தெலங்கானா: பேருந்து விபத்தில் 52 பேர் பலி!

தெலங்கானாவிலுள்ள ஜக்தியால் மாவட்டத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த பேருந்து கவிழ்ந்ததில், இதுவரை 52 பேர் வரை பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தெலங்கானா மாநில அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான பேருந்து ஒன்று, இன்று (செப்டம்பர் 11) காலை 11 மணியளவில் விபத்துக்குள்ளானது. ஜக்தியால் மாவட்டத்திலுள்ள கொண்டகட்டு எனும் ஊரில் இருந்து ஜக்தியாலுக்குச் செல்லும் இந்த பேருந்தில் 80 பேருக்கும் அதிகமானோர் பயணித்ததாகக் கூறப்படுகிறது. சனிவரப்பேட் எனும் ஊர் அருகில் சென்றபோது, அங்குள்ள பள்ளத்தாக்குப் பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

“சரியாக 11.45 மணியில் இருந்து 12 மணிக்குள் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் 15 பேர் பலியாகியுள்ளனர். 20 பேருக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று ஜக்தியால் மாவட்ட ஆட்சியர் ஷரத் இன்று மதியம் தெரிவித்தார். இதையடுத்து, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி இவரது தலைமையில் நடந்து வருகிறது. இந்த விபத்தில், இதுவரை 52 பேர் வரை பலியாகியுள்ளனர். சிலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எதிரே வந்த ஆட்டோ மீது மோதாமல் இருக்க பேருந்து ஓட்டுனர் முயற்சித்ததாகவும், அதனால் நிலை தடுமாறி பேருந்து உருண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அருகிலுள்ள கிராமத்தினர் இதுபற்றி அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணிகளிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon