மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 ஜுன் 2020

விமான நிலையங்களில் மலிவு விலை உணவு!

விமான நிலையங்களில் மலிவு விலை உணவு!

அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் விமான நிலையங்களில் மிகக் குறைந்த விலைக்குத் தேநீர் மற்றும் நொறுக்குத் தீனிகள் விற்பனை செய்யப்படும் என்று இந்திய விமான நிலையங்கள் ஆணையம் அறிவித்துள்ளது.

பொதுவாகவே விமான நிலையங்களில் விற்பனை செய்யப்படும் தேநீர் மற்றும் உணவுப் பொருட்களின் விலை மற்ற கடைகளில் விற்பதை விட அதிகமாகவே இருக்கும். அதிக விலைக்குப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களும் புகார் தெரிவிக்கின்றனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்களும் இந்த விவகாரத்தில் விமர்சனம் செய்துள்ளனர். எனவே இந்திய விமான நிலையங்கள் ஆணையம் இதற்கான தீர்வு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதன்படி, அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் விமான நிலையங்களில் இனி மலிவு விலைக்குத் தேநீர் மற்றும் நொறுக்கித் தீனிகள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே சில விமான நிலையங்களில் மலிவு விலை விற்பனை தொடங்கப்பட்டுவிட்டதாக விமான நிலையங்கள் ஆணைய அதிகாரி ஒருவர் இந்தியா டுடே ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட தனியார் விமான நிலையங்கள் தவிர்த்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 90 விமான நிலையங்களில் மலிவு விலைக்கு உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படவுள்ளன. இந்த விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் எம்.பிக்கள் பலர் குற்றஞ்சாட்டி வந்தனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் சென்ற மார்ச் மாதத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில், விமான நிலையத்தில் ஒரு தேநீருக்கு ரூ.135 கேட்டதாகவும், பின்னர் தேநீர் வேண்டாம் என்று நிராகரித்துவிட்டதாகவும் பதிவிட்டிருந்தார்.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon