மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 ஜுன் 2020

ஆன்லைன் வேலைவாய்ப்பு ஆகஸ்ட்டில் சரிவு!

ஆன்லைன் வேலைவாய்ப்பு ஆகஸ்ட்டில் சரிவு!

தொடர்ந்து மூன்றாவது மாதமாக ஆன்லைன் பணியமர்த்தும் நடவடிக்கைகள் சரிவைக் கண்டுள்ளன.

இதுகுறித்து மான்ஸ்டர்.காம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘இந்தியாவில் ஆன்லைன் வழியாகப் பணியமர்த்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து மூன்றாவது மாதமாக, ஆகஸ்ட்டிலும் சரிவைக் கண்டுள்ளது. இந்த ஆகஸ்ட் மாதத்தில் ஆன்லைன் வேலைவாய்ப்பு குறியீட்டில் இந்தியா 266 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தைக் காட்டிலும் 5 விழுக்காடு சரிவாகும். மேலும், முந்தைய மாதத்தைக் காட்டிலும் 0.74 விழுக்காடு சரிவாகும்.

துறை வாரியாகப் பார்த்தால் 64 விழுக்காட்டுடன் உற்பத்தித் துறை முன்னிலை வகிக்கிறது. சில்லறை வர்த்தகப் பிரிவு 48 விழுக்காடு பங்கைக் கொண்டுள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டைக் காட்டிலும் சுகாதாரத் துறையில் 21 விழுக்காடும், மனிதவளத் துறையில் 19 விழுக்காடும், நிதிச் சேவைகள் துறையில் 16 விழுக்காடும் ஆன்லைன் பணியமர்த்தும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.

சண்டிகர் (17 %), ஜெய்பூர் (4 %) ஆகிய இரண்டு நகரங்கள் மட்டுமே ஆகஸ்ட் மாதத்தில் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. எஞ்சிய நகரங்கள் அனைத்தும் சரிவையே கண்டுள்ளன. ஹைதராபாத்தில் 9 விழுக்காடும், பெங்களூருவில் 9 விழுக்காடும், சென்னையில் 6 விழுக்காடும், தேசியத் தலைநகர் பகுதியில் 7 விழுக்காடும், மும்பையில் 4 விழுக்காடும் ஆகஸ்ட் மாதத்தில் ஆன்லைன் பணியமர்த்துதலில் சரிவு ஏற்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மான்ஸ்டர்.காம் தலைமை நிர்வாக அதிகாரி முகர்ஜி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “2018-19 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்திய உள்நாட்டு உற்பத்தி மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளது. குறிப்பாக உற்பத்தித் துறை வலுவாகச் செயல்பட்டுள்ளது. ஆன்லைன் ஷாப்பிங் தளங்களின் தள்ளுபடி மற்றும் சிறப்பு விற்பனைகளால் சில்லறை வர்த்தகத் துறையும் வளர்ச்சி கண்டுள்ளது.

புதிதாக வேலை தேடுபவர்கள் மற்றும் 3 ஆண்டுகள் வரையில் அனுபவம் உடையவர்களுக்கு அதிகளவில் தேவை உள்ளது. குறிப்பாக மனிதவளம் மற்றும் நிர்வாகத் துறைகளில் தேவை அதிகமாக உள்ளது. திறமையான இளைஞர்களுக்குச் சரியான வழிகாட்டுதல் மற்றும் பயிற்சித் திட்டங்கள் தேவைப்படுகின்றன” என்றார்.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon