மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 ஜுன் 2020

கமலுக்கு நன்றி: யோகேந்திர யாதவ்

கமலுக்கு நன்றி: யோகேந்திர யாதவ்

திருவண்ணாமலையில் கைது செய்யப்பட்ட ஸ்வராஜ் அபியான் அமைப்பின் நிறுவனர் யோகேந்திர யாதவ் இன்று (செப்டம்பர் 10) மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

ஸ்வராஜ் அபியான் அமைப்பின் நிறுவனரும், முன்னாள் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினருமான யோகேந்திர யாதவ் திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகளைச் சந்தித்து ஆதரவு தெரிவிக்க வந்தார். ஆனால், கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி அவரைச் செங்கம் போலீசார் கைது செய்தனர்.

இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக கமல், "கருத்து கேட்டலை தடுக்கும் அதிகாரம் இவர்களுக்கு எப்படி வந்தது. சட்டத்தைக் காரணமாக கூறி குரல்கள் எழாமல் செய்வது சர்வாதிகாரம் என்று தோன்றுகிறது. இது ஜனநாயக நாடு என்பதை வலியுறுத்த வேண்டியுள்ளது. மக்கள் கருத்துகளை பயமில்லாமல் தெளிவாக எடுத்துச் சொல்லும் சூழல் வரவேண்டும். யோகேந்திர யாதவ் கைது கண்டனத்துக்குரியது” என்று தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், “மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை ஸ்வராஜ் அபியான் கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் இன்று கட்சித் தலைமை அலுவலகத்தில் சந்தித்து தான் கைது செய்யப்பட்ட போது ஆதரவு அளித்தமைக்கு நன்றி தெரிவித்தார்” என்று மக்கள் நீதி மய்யம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த யோகேந்திர யாதவ், நாட்டில் பல்வேறு மாநில அரசை எதிர்த்திருக்கிறேன். ஆனால் இதுபோன்ற காவல் துறை நடவடிக்கையை நான் எங்கும் சந்தித்ததில்லை. எதிர்கால அரசியலில் கமலின் பங்கு இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் தேவை என அவரிடம் நன்றி தெரிவித்த போது வலியுறுத்தினேன்” என்று தெரிவித்துள்ளார்.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon