மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 ஜுன் 2020

பத்திரிகையாளர் மிரட்டல்: மாதர் சங்கம் புகார்!

பத்திரிகையாளர் மிரட்டல்: மாதர் சங்கம் புகார்!

தமிழக அமைச்சரின் பினாமிகளுக்கு டெண்டர் வழங்குவது தொடர்பாகச் செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் ஒருவரை கோவை ஒப்பந்ததாரர் மிரட்டியது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு, காவல் ஆணையரிடம் ஜனநாயக மாதர் சங்கம் புகார் அளித்துள்ளது.

தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறவினர்கள், பினாமிகள் பெயரில் டெண்டர்கள் அளிப்பது குறித்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா குழும ஊடகமொன்றில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சியின் மீது வழக்குப் பதியவிருப்பதாகக் கூறியிருந்தார் அமைச்சர் வேலுமணி.

இந்த நிலையில், டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் கோமல் கவுதம் என்பவரின் வாட்ஸ்அப்பில் சிலர் மிரட்டல் விடுத்தனர். தரக்குறைவான வார்த்தைகளில் திட்டி, அவருக்குத் தகவல் அனுப்பினர். இது சமூக வலைதளங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, பெண் பத்திரிகையாளரைக் கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர் சந்திரபிரகாஷ் மிரட்டியதாகத் தகவல் வெளியானது.

இது தொடர்பாக, கோவை மாவட்ட காவல் ஆணையர் பெரியய்யாவிடம் ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் அதன் செயலாளர் ராதிகா புகார் அளித்தார். அதில், பெண் பத்திரிகையாளர் கோமல் கவுதமை மிரட்டிய சந்திரபிரகாஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

''பிரபல ஆங்கில நாளிதழில் பணிபுரிந்துவரும் கோமல் கவுதம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது உறவினர்கள், பங்குதாரர்கள் சொத்து குறித்த செய்தியினை ஒரு மாத காலத்துக்கு முன் வெளியிட்டார்.

மேற்படிச் செய்தியை வெளியிட்டதன் காரணமாக அமைச்சருடைய பினாமி ஒப்பந்ததாரர்களான சி.பி.சந்திரபிரகாஷ் என்பவர் கோமல் கவுதம் என்பவரைத் தரக்குறைவாகப் பேசி லஞ்சம் கொடுக்காத காரணத்தினால் தான் செய்தி வெளியிட்டதாக அவமானப்படுத்தி, மன உளைச்சலுக்கு ஆளாக்கி, ஒரு பெண் பத்திரிகையாளர் என்றும் பாராமல் அவமானப்படுத்தியுள்ளார்.

நாட்டில் நடக்கக்கூடிய ஊழலுக்கு எதிராகவும், அமைச்சர் மூலமாக ஒப்பந்ததாரர்கள் ஊழல் செய்வதை அம்பலப்படுத்தி ஜனநாயகத்திற்குக் கொண்டு சேர்க்கும் பத்திரிகைத்துறையில் பணிபுரிந்து செயலாற்றி வந்த கோமல் கவுதம் என்பவரை அரசுத் துறை சார்ந்த ஒப்பந்ததாரர் சந்திரபிரகாஷ் என்பவர் பெண் பத்திரிகையாளர் என்றும் பாராமல் அவமரியாதையாகப் பேசி அவமானப்படுத்தி தொலைத்துக் கட்டிவிடுவதாக மிரட்டியுள்ளார்.

அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும்'' என்று அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon