மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 28 மே 2020

பாஜக கூறுவது மிகப்பெரிய நகைச்சுவை!

பாஜக கூறுவது மிகப்பெரிய நகைச்சுவை!

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசு பொறுப்பில்லை என்று பாஜக கூறுவது இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை என்று ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை கடந்த மாதம் 24ஆம் தேதியிலிருந்து கடுமையாக உயர்ந்துவருகிறது. இதனைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு (பாரத் பந்த்) காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. பந்திற்கு பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி இன்று நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. சென்னை நிலவரப்படி இன்று (செப்டம்பர் 10) ஒரு லிட்டர் பெட்ரோல் 83.91 ரூபாய்க்கு, டீசல் 76.98 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் விலை உயர்வுக்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை என்று கூறும் பாஜகவினர், முந்தைய காங்கிரஸ் அரசு கையாண்ட விதம்தான் விலை உயர்வுக்கு காரணம் என்றும் தெரிவித்துவருகின்றனர்.

இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று (செப்டம்பர் 10) தனது ட்விட்டர் பக்கத்தில், “பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அரசு பொறுப்பில்லை என்று பாஜக கூறுவது இந்த ஆண்டின் மிகப் பெரிய நகைச்சுவை. பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு விதித்துள்ள கொடுமையான வரிகள் தான் விலை உயர்வுக்குக் காரணம் என்பதைச் சிறு பிள்ளைகள் கூட அறிவார்கள்” என்று கூறியுள்ளார்.

“பெட்ரோல், டீசல் பொருட்களை ஜிஎஸ்டி வரி முறையின் கீழ் கொண்டு வருவதற்கு ஏன் மத்திய அரசு முரட்டுத்தனமாக மறுக்கிறது. கச்சா எண்ணெய் விலை $107 ஆக இருந்த போது விலை குறைவு. இப்பொழுது கச்சா எண்ணெய் விலை $ 78 ஆக இருக்கும் போது விலை உயர்வு ஏன்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon