மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 ஜுன் 2020

எல்லாவற்றிற்கும் பொருந்தும் விதார்த்

எல்லாவற்றிற்கும் பொருந்தும் விதார்த்

எல்லா வகையான படங்களிலும் நடிக்க விருப்பம். என்னை ஒரு கூண்டில் அடைத்துவிட வேண்டாம் என்று நடிகர் விதார்த் கூறியுள்ளார்.

என்னதான் கதாநாயகர்கள் நடித்தாலும், கதைதான் நாயகன் என்பதை சினிமா ஒவ்வொரு முறையும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் ஒரு டூவீலர் வண்டியை கதையின் மையமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வண்டி’. ரூபி ஃபிலிம்ஸ் ஹஷீர் தயாரிப்பில் விதார்த், சாந்தினி நடித்திருக்கிறார்கள். சூரஜ் எஸ் குரூப் இசையமைத்திருக்கும் இந்த படத்தை ரஜீஷ் பாலா இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று (செப்டம்பர் 09) பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இசையை வெளியிட்டு வாழ்த்திப் பேசினார்.

இவ்விழாவில் நடிகர் விதார்த் பேசும்போது, “பத்திரிக்கையாளர்களின் பாராட்டினால் இன்று ‘மேற்கு தொடர்ச்சி மலை’ திரைப்படம் 3-வது வாரம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதி, லெனின் பாரதி அளவுக்கு எனக்கும் மகிழ்ச்சி. ‘வீரம்’ படத்தின்போது எனக்கு இந்த கதையை சொல்ல வந்தார்கள். ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் 4 கேமராக்களை வைத்தெல்லாம் படத்தை எடுத்தார்கள். இயக்குநர் ரொம்பவே கஷ்டப்படுத்தினார். எங்கள் எல்லோருக்கும் அவரைப் பார்த்தாலே பயம்.

‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா உடன் நடிக்கும்போது இயக்குநர் ராதாமோகன் என் நடிப்பை பாராட்டி தள்ளினார். அதற்கு காரணம் இந்தப் படத்தில் நான் எடுத்த பயிற்சிதான். இந்த படத்தில் ஒரு ஃபிரேம் மாறினாலும் படம் புரியாது. அப்படிப்பட்ட ஒரு ஹைப்பர்லிங் படம்.

இந்தப் படம் தயாரிப்பில் இருக்கும்போது சில பிரச்சினைகள் ஏற்பட்டது, அப்போது தேனப்பன் சாரிடம் சென்றேன். அவர்தான் இதை சுமூகமாக முடித்து வைத்தார். S Focus சரவணன் சார் ‘குப்பத்து ராஜா’ என்ற ஒரு படத்தை எடுத்துக் கொண்டிருக்கும்போது இந்த படத்தை ரிலீஸ் செய்ய முன் வந்தது பெரிய விஷயம். அதுதான் படத்தின் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கை. அடுத்து ஒரு கேங்க்ஸ்டர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். எல்லா வகையான படங்களிலும் நடிக்க விருப்பம் இருக்கிறது. என்னை ஒரு கூண்டில் அடைத்துவிட வேண்டாம்” என்றார்.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon