மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 ஜுன் 2020

ஸ்டெர்லைட்: தீர்ப்பாயத்துக்குத் தடை மறுப்பு!

ஸ்டெர்லைட்: தீர்ப்பாயத்துக்குத் தடை மறுப்பு!

ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொள்வதற்கான தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் முடிவுக்குத் தடை விதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

கடந்த மே 28ஆம் தேதியன்று தூத்துக்குடியில் வேதாந்தா குழுமத்துக்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான உத்தரவைப் பிறப்பித்தது தமிழக அரசு. இதனை எதிர்த்து, தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல் முறையீட்டு மனுதாக்கல் செய்தது வேதாந்தா குழுமம். இதற்குப் பதிலளித்த பசுமைத் தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளை மட்டும் மேற்கொள்ள அனுமதித்தது.

இதைத் தொடர்ந்து, மேகாலயா மாநில உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஸ்டெர்லைட் ஆய்வுக் குழுவை அமைத்தது தேசியப் பசுமைத் தீர்ப்பாயம். இதற்கு எதிராக, கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதியன்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

இந்த வழக்கின் விசாரணை, இன்று (செப்டம்பர் 10) நீதிபதிகள் நாரிமன், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய வேண்டுமென்ற தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்குத் தடை விதிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்தனர் நீதிபதிகள். என்ன அடிப்படையில் இந்த தடை கோரப்படுகிறது என்பது குறித்து கேள்வி எழுப்பினர்.

ஸ்டெர்லைட் ஆலையில் அந்தக் குழு ஆய்வு செய்து சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அடுத்த நடவடிக்கை குறித்து முடிவு செய்யலாம் என்று கூறி இந்த வழக்கை ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon