மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 28 மே 2020

50 ஆண்டுகள் ஆட்சியில் இருப்போம்: அமித் ஷா

50 ஆண்டுகள் ஆட்சியில் இருப்போம்: அமித் ஷா

2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்றும் அடுத்த 50 ஆண்டுகள் தங்கள் ஆட்சியை அகற்ற முடியாது என்றும் பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில், 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரை அமித் ஷா தலைவர் பதவியில் தொடரும்வகையில் உட்கட்சித் தேர்தலைத் தள்ளி வைக்க சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தின் இறுதி நாளான நேற்று (செப்டம்பர் 9), வாக்காளர்களை எப்படி அணுகுவது என்பது தொடர்பான 23 ஆலோசனைகள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டது. பூத் அளவில் பாஜகவை வலுப்படுத்த வேண்டும் என்று கட்சியினரை வலியுறுத்திய மோடி, அனைத்து பூத்களையும் வெல்ல வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஒற்றுமையாக இல்லாதவர்கள் எல்லாம் பாஜகவுக்கு எதிராக மகா கூட்டணி அமைக்கின்றனர், இதுவே பாஜகவுக்கு கிடைத்த வெற்றி என்றும் மோடி குறிப்பிட்டார்.

இதேபோல், 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்று பேசிய அமித் ஷா, அடுத்த 50 ஆண்டுகளுக்கு பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற முடியாது என்றும் கூறியுள்ளார்.

கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், எதிர்க்கட்சிக்குத் தலைவர்களும் கிடையாது, கொள்கையும் கிடையாது என்று விமர்சித்தார்.

இதேபோல், “வரவுள்ள தேர்தலில் 48 மாதங்களில் நாங்கள் மேற்கொண்ட செயல்திறன் அவர்களது (காங்கிரஸ்) 48 ஆண்டு கால செயல்திறனுக்கு எதிராகத் தீர்மானிக்கப்படும்” என்று மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் குறிப்பிட்டார்.

புதிய இந்தியா 2022 என்ற தலைப்பில் தீர்மானமும் கூட்டத்தில் அறிமுகப்பட்டது. பாஜக தொடங்கிய பின்னர் வாஜ்பாய் இல்லாமல் நடைபெற்ற முதல் செயற்குழு கூட்டம் இதுவாகும். வாஜ்பாயின் நினைவாகப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon