மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 ஜுன் 2020

சனாதன அமைப்புகளை தடை செய்ய வேண்டும்!

சனாதன அமைப்புகளை தடை செய்ய வேண்டும்!

கெளவுரி லங்கேஷ், கல்புர்கி, தபோல்கர் உள்ளிட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கொலை செய்யப்பட்டதற்கு காரணமான சனாதன அமைப்புகளை தடை செய்ய வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகளின் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சனாதன பயங்கரவாத எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் வலதுசாரி-சனாதன பயங்கரவாதத்தை கண்டித்து இன்று (செப்டம்பர் 10) மாலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், சிபிஐ மூத்த தலைவர் நல்லக்கண்ணு, சிபிஎம் முன்னாள் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, சிபிஐ மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன், தவாக தலைவர் வேல்முருகன், மமக பொதுச்செயலாளர் அப்துல் சமது, ரவிக்குமார், சிந்தனை செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “ஆர்எஸ்எஸ், சங்பரிவார் உள்ளிட்ட பயங்கரவாத, சனாதன அமைப்புகள் நாட்டில் தலைவிரித்து ஆடுகின்றன. மிக வெளிப்படையாகவோ அவைகள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆர்எஸ்எஸ் போன்று மிகவும் ஆபத்தான இயக்கம் சனாதன சன்ஸ்தான் இயக்கமாகும். இந்த அமைப்புகளின் ஒரே நோக்கம் என்பது இந்து ராஸ்டிரியத்தை அமைப்பது.

இந்து ராஸ்டிரியத்திற்கு எதிராக யார் இருந்தாலும் அவர்களைக் கொலை செய்வது என்கிற அடிப்படையில் தான் அவர்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். எந்த அமைப்புகளையும் சாராத அல்லது அமைப்புகளில் இல்லாத எழுத்தாளர்களும், செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் குறிவைத்து கொல்லப்பட்டிருக்கிறார்கள். கெளரி லங்கேஷ், கல்புர்கி, தபோல்கர் உள்ளிட்டோரின் கொலைக்கு காரணமான சனாதன சன்ஸ்தான் அமைப்பை சார்ந்தவர்கள் கைது செய்யப்பட வேண்டும். இந்து ராஸ்டிரியத்தை செயல்படுத்த நினைக்கின்ற சனாதன பயங்கரவாத அமைப்புகளை தடை செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

“சனாதன சன்ஸ்தான் அமைப்பால் ரவிக்குமார் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்பதை உளவுத் துறை உறுதி செய்திருக்கிறது. ரவிக்குமாருக்கு புதுவை அரசு பாதுகாப்பு வழங்கியிருக்கிறது. தமிழகத்திற்கு வந்துள்ள ரவிக்குமாருக்கு தற்போது பாதுகாப்பில்லை, அதனால் தமிழக அரசு அவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். சனாதன சன்ஸ்தான் அமைப்பின் கிளைகள் தற்போது தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை தடை செய்ய வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon