மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 ஜுன் 2020

மேகதாது அணை: பிரதமரை சந்தித்த குமாரசாமி

மேகதாது அணை: பிரதமரை சந்தித்த குமாரசாமி

பிரதமர் மோடியை கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் அவரது தந்தையும் முன்னாள் பிரதமருமான தேவகௌடா இன்று சந்தித்து பேசினர். அப்போது மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

அண்மையில் பெய்த கன மழை காரணமாக கர்நாடகாவின் குடகு மாவட்டம் கடும் பாதிப்பை சந்தித்தது. முக்கொட்லு, காட்டக்கேரி, ஆலேறி, மக்கந்தூர் உட்படக் கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது, குடகு வெள்ள நிலவரம் தொடர்பாக குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் ஏற்கனவே கர்நாடக முதல்வர் குமாரசாமியை தொடர்பு கொண்டு கேட்டறிந்தனர். இந்நிலையில், பிரதமர் மோடியை குமாரசாமி இன்று(செப்டம்பர் 10) நேரில் சந்தித்து பேசினார். அப்போது, The open Eyes: A Journey through Karnatka” என்ற புத்தகத்தை பிரதமருக்கு அவர் பரிசளித்தார். முன்னாள் பிரதமர் தேவகௌடா மற்றும் அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பின்போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீர் செய்ய நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று கர்நாடக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி, “கடற்கரை மற்றும் மலேநாடு பகுதிகளைச் சேர்ந்த 7 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் பயிர்களை மட்டுமல்லாது உட் கட்டமைப்பு மற்றும் மனித உயிர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதைப் பிரதமரிடம் தெரிவித்தோம். நிவாரண நிதியாக ரூ.1,199 கோடி வழங்க வேண்டும் என்றும் அவரிடம் வலியுறுத்தினோம்” என தெரிவித்தார்.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக ரூ. 3,705.87 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறிய குமாரசாமி, “மாநில அரசு இதுவரை 49 கோடி ரூபாயை வழங்கியுள்ளது” என்று குறிப்பிட்டார்.

அதேவேளையில், மேகதாது அணை குறித்தும் பிரதமருடன் ஆலோசிக்கப்பட்டுள்ளதாகக் கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் டி.கே. சிவக்குமார் கூறியுள்ளார்.

பிரதமருடனான சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அணை விவகாரத்தில் பிரச்சினையை தீர்க்க. இரு மாநில முதல்வர்களை பிரதமர் அழைத்துப் பேச வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்” என அவர் தெரிவித்தார்.

கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்டுவதற்கான அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் அம்மாநில அரசு தாக்கல் செய்துள்ளது. அதில், புதிய அணை கட்ட ஒப்புதல் வழங்கும்படி கோரியுள்ளது. எனினும் கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ள சாத்தியக்கூறு அறிக்கையை பரிசீலிக்கக் கூடாது என்று பிரதமருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடந்த 4ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளார்.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon