மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 ஜுன் 2020

ஏர்செல் மேக்சிஸ்:கார்த்தி சிதம்பரத்துக்கு நோட்டீஸ்!

ஏர்செல் மேக்சிஸ்:கார்த்தி சிதம்பரத்துக்கு நோட்டீஸ்!

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக் கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவுக்கு வரும் செப்டம்பர் 18ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவின் போது, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால் அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறி அமலாக்கத் துறை இன்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. விசாரணையின் போது, அவர் வெறுப்புணர்வைக் காட்டுவதாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இந்த மனுவை இன்று மதியம் 2 மணியளவில் விசாரித்த நீதிபதி, கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய மனுவுக்கு 18ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார்.

வழக்கு பின்னணி

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தார். அப்போது, ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் ரூ.3500 கோடியை முதலீடு செய்வதற்கு சட்டவிரோதமாக ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது இதுதொடர்பாக சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரிடம் சிபிஐ, அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு புதிய குற்றப்பத்திரிகையை சிபிஐ கடந்த ஜூலை 19 ஆம் தேதி தாக்கல் செய்தது. தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, இருவரையும் அக்டோபர் 8ஆம் தேதி வரை கைது செய்ய நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon