மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 ஜுன் 2020

தீபிகாவின் மன அழுத்தம்!

தீபிகாவின் மன அழுத்தம்!

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், தமக்கு ஏற்பட்ட மன அழுத்தம் குறித்துப் பேசியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற லைவ் லவ் லாஃப் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் தீபிகா படுகோன் தமக்கு ஏற்பட்ட மன அழுத்தம் குறித்து ஏற்கெனவே பேசியிருந்தார். கடந்த சனிக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் அதற்கான விளக்கம் அளித்துள்ளார்.

மன அழுத்தத்தை எதிர்கொள்ள தாம் மேற்கொண்ட பயிற்சிகளை விளக்கிய அவர், தமது உணர்ச்சிகள், எண்ணங்களை வெளியிட்டார். இது குறித்து அவர் பேசும்போது, “என் அனுபவத்தில் இருந்து வெளியே வந்து இந்த உலகத்துடன் பகிர்ந்துகொள்வதை நேர்மையான விஷயமாகப் பார்க்கிறேன். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, நான் தைரியமாக இருப்பது பற்றி நினைக்கவில்லை. அது புரட்சிகரமானது என்றும் கருதவில்லை.

எனக்கு டென்ஷன் ஏற்படத் துவங்கினாலே வயிற்றில் ஏதோ செய்யும். தீபிகா, மனதை கட்டுப்படுத்து, உன்னை கவனித்துக் கொள் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வேன். மூச்சை இழுத்து விட வேண்டும், நன்றாக தூங்க வேண்டும் என்று நினைப்பேன். மன அழுத்தம் ஏற்பட்டதால் என் உடல் நலத்தையும் பேணிக் காப்பதின் முக்கியத்துவத்தை தெரிந்து கொண்டேன்.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதை என்னால் மறக்கவே முடியாது. அது மிகவும் மோசமான அனுபவம். மீண்டும் மன அழுத்தம் ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் இல்லாமல் இல்லை. மீண்டும் அந்த மோசமான அனுபவம் ஏற்படவே கூடாது. அதனால் எண்ணங்களை கட்டுப்படுத்தி வருகிறேன்.

எனக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அப்போது தான் நான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதை என் அம்மா தான் கண்டுபிடித்தார். வாழ்க்கையில் என்ன நடந்தாலும் சந்தோஷமே இல்லாமல் இருந்தேன். ஏதோ பெயருக்கு வாழ்ந்த என்னை என் அம்மா தான் மனநல ஆலோசகரிடம் அழைத்துச் சென்றார். என்னை பரிசோதனை செய்த அவர் எனக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார்.

என்னை பற்றி யார் என்ன நினைப்பார்களோ என்ற பயம் இல்லாமல் இன்று மகிழ்ச்சியாக உள்ளேன். நாம் எளிதில் அடுத்தவர்களை பற்றி ஏதாவது கணித்து இவர்கள் இப்படித் தான் என்று முடிவு செய்துவிடுகிறோம். மன அழுத்தம் பற்றி வெளியே கூற வெட்கப்பட வேண்டாம். உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்தால் சரி செய்துவிடலாம்” என்றார்.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon