மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 ஜுன் 2020

எட்டு வழிச் சாலையின் பின்னணி: யோகேந்திர யாதவ்!

எட்டு வழிச் சாலையின் பின்னணி: யோகேந்திர யாதவ்!

எட்டு வழிச் சாலையின் பின்னணியில் பெரிய பொருளாதார சக்திகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் உள்ளன என ஸ்வராஜ் இந்தியா கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.

எட்டு வழிச் சாலையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளிடம் பேசுவதற்காக தமிழகம் வந்திருந்த யோகேந்திர யாதவ் திருவண்ணாமலையில், தமிழக போலீசாரால் சனிக்கிழமையன்று கைது செய்யப்பட்டார். அவர் தொலைபேசியில் இந்து இதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியின் தமிழாக்கச் சுருக்கத்தை இங்கு தருகிறோம்.

சேலம் - சென்னை விரைவு வழிச்சாலை பற்றி எப்போது நீங்கள் கேள்வி பட்டீர்கள்?

ஊடகத்தின் வழியாகக் கேள்விப்பட்டேன். ஹரியானாவில் நாங்கள் நடத்திய பாதயாத்திரையில் கலந்து கொள்ள கிருஷ்ணகிரியிலிருந்து வந்த ஒரு விவசாய செயல்பாட்டாளரிடமிருந்து முழு விவரங்களைத் தெரிந்துகொண்டு அதி்ல் கவனம் செலுத்த தொடங்கினேன்.

உங்கள் வருகை எப்படி அமையும் என்பது குறித்து உங்களுக்கு ஏதாவது யோசனை இருந்ததா?

இந்தத் திட்டத்தைப் பற்றி எந்த கருத்தும் இன்றி ஒரு உண்மை அறியும் குழுவாகத்தான் நான் இங்கு வந்தேன் என்பதை தெளிவாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். சாலை அமைப்பது என்பது மக்கள் விரோதத் திட்டம் என்று எளிமையாக ஊகித்துக்கொள்ள விரும்பவில்லை. நான் இன்னும் திறந்த மனதுடன்தான் உள்ளேன். இது தொடர்பான விரிவான தொழில்நுட்ப அறி்க்கையைப் படிக்கவில்லை. நான் இன்னும் எந்த விவசாயிடமும் அல்லது கிராமத்தாரிடமும் பேசவில்லை. அதற்குள் போலீசார் தடுத்து விட்டனர்.

போலீஸ் நடவடிக்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இங்கு ஏதோ மர்மத்தை உணர்கிறேன். உள்ளுர் நிர்வாகமும் போலீசாரும் நடந்துகொண்டது ஏதோ அதிகார துஷ்பிரயோகம் மட்டும் என்று நான் நினைக்கவில்லை. தெளிவாகக் கூற வேண்டுமெனில், இதில் மேலிடத்திலிருந்து உத்தரவுகள் வந்துள்ளன. இதில் பெரிய பொருளாதார நலன்கள் சம்பந்தப்பட்டுள்ளன. அவர்களின் பொருளாதார நலன்களைப் பாதுகாக்க வேண்டியுள்ளது. ஒரு சாதாரண உண்மை அறியும் குழு வந்தது உள்ளுர் நிர்வாகத்தை நடுங்க வைத்துள்ளது என்றால், கண்ணுக்கு தெரிவதைக் காட்டிலும் இதில் இன்னும் பெரிய விஷயங்கள் உள்ளன என்பது தெரிய வருகிறது. எனவே பெரிய அளவிலான உண்மை அறியும் குழு அமைக்கப்பட வேண்டும். ஆழமான புலனாய்வும் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கருத்து வேறுபாடு (கருத்துரிமை) எப்படி எதிர்கொள்ளப்படுகிறது?

முன்னதாக எஸ்பி.உதயகுமார், டிஎம்.கிருஷ்ணா ஆகிய நண்பர்கள் என்னிடம் இம்மாநிலத்தில் சட்ட ஒழுங்கு நிலை சீர்குலைந்ததைப் பற்றியும் இது போலீஸ் அரசாக செயல்படுவதையும் கூறியிருந்தனர். நான் அப்படி நினைக்கவில்லை ஆனால், சனிக்கிழமையன்று இங்குள்ள போலீசார் நாங்கள் எதற்காக காவலில் வைக்கப்படுகிறோம் என்று ஒரு விளக்கம் கூட அளிக்கவில்லை. அவர்கள் ஒரு காலாவதியாகிப்போனதும் போலியானதுமான அரசின் உத்தரவை அளித்தனர். சட்டப்படி நடந்துகொள்வது என்பதே போலீசாருக்கு அந்நியமாகத் தெரிகிறது போலும். போலீசாரின் செயல்பாட்டை வைத்து பார்க்கும்போது போலீஸ் அரசு நடைபெறுகிறது என்ற கருத்து வலுப்பெறுவதாகவே தெரிகிறது.

விவசாயக் கூட்டங்களில் பேசியபோது நீங்கள் என்ன உணர்ந்தீர்கள்?

நாங்கள் மற்ற இடங்களில் மூன்று கூட்டங்களை நடத்தினோம். அதில் 30 விவசாயிகள் வரை கலந்துகொண்டனர். அவர்களும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். ஏற்கனவே சேலத்திலிருந்து சென்னைக்கு செல்வதற்கு 3 வழிகள் இருக்கும்போது இந்த திட்டம் தேவைதானா? என்று கேட்டனர். பெண்களிடம் பேசும்போது இந்த திட்டம் நாசகரமானது என்பது எனக்கு தெளிவாக புரிந்தது. உங்களுக்கு ஏன் இந்த நான்காவது சாலை? ஏன் இருக்கின்ற சாலையைச் சீராக்கக் கூடாது? நான் நேற்று முந்தைய இரவில் ஒரு சாலையில் பயணித்தேன். அது படுமோசமாக இருந்தது.

நீங்கள் என்ன சாதித்தீர்கள்? இந்தத் தோழமை உறவை எப்படி அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லப் போகிறீர்கள்?

நேற்றைய முன்தினம் நடந்தது சிறிய அளவிலிருந்தாலும் முக்கியமான நிகழ்வாக நடந்தது. அச்ச உணர்வுகள் உடைந்து போயின. இந்தத் திட்டத்தை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். வெளியிலிருந்து ஓய்வு பெற்ற நீதிபதிகளையும் உள்ளடக்கிய பெரிய குழுவானது உண்மை அறியும் குழுவாக ஈடுபடுத்தப்பட வேண்டும். திட்டம் செயல்படுத்தக்கூடிய முழு பாதையையும் ஆராய வேண்டும். வெளியிலிருந்தும் மாநிலத்திலுள்ள அமைப்புகளும் இணைந்து உண்மை அறியும் குழுவில் பணிபுரிய வேண்டும். என்பதை நாங்கள் முழுமையாக ஏற்கிறோம்.

தமிழில் – சேது ராமலிங்கம்

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon