மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 ஜுன் 2020

ராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு!

ராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளதை முன்னிட்டு, அப்பகுதியில் 144 தடை உத்தரவு இன்று (செப்டம்பர் 10) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

செப்டம்பர் 11ஆம் தேதியன்று தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் மற்றும் அக்டோபர் 29, 30 ஆகிய தேதிகளில் தேவர் குருபூஜையை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரையும் அக்டோபர் 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை வெளி மாவட்ட வாடகை வாகனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடக்கும் குருபூஜை விழாவுக்கு வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த 144 தடை உத்தரவை அம்மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் பிறப்பித்துள்ளார். இன்று அமல்படுத்தப்பட்ட இந்த 144 தடை உத்தரவு, அடுத்த மாதம் 31ஆம் தேதி வரை 52 நாட்கள் அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரமக்குடியில் நாளை (செப்டம்பர் 11) இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ளதையடுத்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வருபவர்கள் டூரிஸ்ட் கார், வேன் போன்ற வாடகை வாகனங்களில் வர அனுமதியில்லை என்று காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியையொட்டி, அழகப்பா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி அருகில் உள்ள திடலில் நினைவஞ்சலிக்கு வரும் வாகனங்கள் நிறுத்தி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பரமக்குடி நகரம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுக் காவல் துறையினர் கண்காணிப்பு பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர். 8 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இமானுவேல் சேகரன் நினைவுநாளை முன்னிட்டு, சிவகங்கை, இளையான்குடி, மானாமதுரை மற்றும் திருப்புவனம் ஆகிய நான்கு தாலுக்காவில் இன்று முதல் 3 நாட்கள் வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று எஸ்.பி. ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon