மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 ஜுன் 2020

விலை உயர்வுக்கு காங்கிரஸ்தான் காரணம்-தம்பிதுரை

விலை உயர்வுக்கு காங்கிரஸ்தான் காரணம்-தம்பிதுரை

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், விலை உயர்வுக்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம்சாட்டியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரத்தில் மத்திய அரசு ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் அதன் விலையை குறைக்க வலியுறுத்தியும் இன்று நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இது குறித்து இன்று (செப்டம்பர் 19) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தம்பிதுரை, “பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமே காங்கிரஸ்தான். காங்கிரஸ் கட்சியின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திமுகவும் அங்கம் வகித்தது. அந்தக் கூட்டணிதான் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கக் கூடிய உரிமையை தனியார் நிறுவனத்திற்கு கொடுத்தது. அதன் விளைவாகத்தான் இந்த விலை உயர்வு. தனியார் நிறுவனம் கொள்ளையடிப்பது போன்ற ஒரு திட்டத்தை வகுத்தது அந்த கூட்டணி அரசு தான். அந்தக் கொள்கையைத்தான் தற்போதுள்ள மத்திய அரசும் கடைப்பிடித்து வருகிறது” என குற்றம்சாட்டினார்.

மேலும், “பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது. மத்திய அரசின் செயல்பாட்டை அதிமுகவும் கண்டிக்கிறது. தனியார் நிறுவனம் விலை நிர்ணயம் செய்யும் முறையை ரத்து செய்து, மத்திய அரசே விலையை நிர்ணயம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவந்தால், மாநில அரசுகளின் உரிமை பறிபோகும். மாநில அரசுக்கும் பல்வேறு உரிமைகள் இருக்கின்றது” என தெரிவித்தார்.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon