மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 ஜுன் 2020

விஷவாயுவினால் 5 துப்புரவுத் தொழிலாளிகள் பலி!

விஷவாயுவினால் 5 துப்புரவுத் தொழிலாளிகள் பலி!

பாதாள சாக்கடையைச் சுத்தம் செய்த 5 துப்புரவு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியை அனைத்து விதமான தாக்குதல்களில் இருந்தும் பாதுகாக்கும் வகையில், உயர் பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை நிறுவ மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் இந்த திட்டத்தின் மூலம் வான் வழித் தாக்குதல் உள்ளிட்ட எல்லாவற்றையும் தடுத்து நிறுத்த முடியும். உலகிலேயே, அமெரிக்கா மற்றும் ரஷ்ய தலைநகர்களில் மட்டும்தான் இந்த வசதி உள்ளது. விரைவில் இந்தியாவிற்கும் இந்த வசதி வந்துவிடும். ஆனால், இந்த பாதுகாப்பெல்லாம் யாருக்கானது என்ற கேள்வி இந்த நேரத்தில் எழுகிறது.

செவ்வாயில் நீர் உள்ளதா என ஆராயும் திட்டத்தை செயல்படுத்தி உலகையையே திரும்பி பார்க்க வைத்தது இந்தியா. ஆனாலும், இங்கு தற்போது வரை துப்புரவுப் பணியில் மனிதர்களே ஈடுபடுத்தப்படுகின்றனர்.

டெல்லியின் மோத்தி நகர் பகுதியில் உள்ள டிஎல்எப் அடுக்குமாடி குடியிருப்பு முன்பிருந்த பாதாளச் சாக்கடையைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 5 துப்புரவுத் தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி நேற்று (செப்டம்பர் 9) பரிதாபமாக உயிரிழந்தனர்.

திடீரென விஷவாயு தாக்கியதால், 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற மூன்று பேருக்கும் டெல்லியின் தீன் தயாள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி அவர்கள் இன்று காலை உயிரிழந்தனர். இறந்தவர்கள் அனைவரும் 20 வயதிலிருந்து 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். மத்தியில் ஆளும் பாஜக அரசு, இது மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் தவறு என குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து பேசிய பாஜக நிர்வாகி ஒருவர் கூறுகையில், "டெல்லியில் இது போன்று நடப்பது முதல்முறையல்ல. ஆம் ஆத்மி அரசு தான் இந்த தவறுக்குக் காரணம். பாதாள சாக்கடையைச் சுத்தம் செய்ய நவீனத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தனர். பலர் உயிரிழந்தும், அது குறித்து எந்த முயற்சியும் செய்யாமல் அப்பாவி மக்களின் உயிருடன் விளையாடுகின்றனர்" என்று தெரிவித்தார்.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.50 லட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று 99ஆவது வார்டு கவுன்சிலர் சுமித்ரா மிஸ்ரா கோரிக்கை வைத்துள்ளார்.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon