மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 ஜுன் 2020

திமுகவுடன் கூட்டணி என்று சொன்னதில்லை!

திமுகவுடன் கூட்டணி என்று சொன்னதில்லை!

எந்த காலகட்டத்திலும் திமுகவுடன் கூட்டணி என நாங்கள் சொன்னதில்லை என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

பாஜகவுக்கும் திமுகவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டியிருந்த மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை, “அழகிரி பேரணியின் முக்கியத்துவத்தை குறைப்பதற்காகவே, விஜயபாஸ்கர், டிஜிபி உள்ளிட்டோரின் இல்லங்களில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் விரைவில் இவர்களின் கூட்டணி வெளிப்படும் என்றும் தொடர்ந்து தெரிவித்துவருகிறார்.

பாஜக தேசிய செயற்குழுவில் கலந்துகொண்ட பிறகு இன்று (செப்டம்பர் 10) சென்னை திரும்பிய பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது இதற்கு பதிலளித்தார்.

“நாகரீகம் கருதி கலைஞரின் நினைவேந்தல் நிகழ்வுகளில் நாங்கள் கலந்துகொண்டோம். ஆனால் எந்த காலகட்டத்திலும் திமுகவுடன் கூட்டணி என்று சொன்னதே இல்லை. தம்பிதுரைக்கே தெரியும், சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான், அதுவும் சிபிஐக்கு வந்த தகவலின் அடிப்படையில்தான் இந்த சோதனைகள் நடைபெற்றன” என்று அவர் தெரிவித்தார்.

எழுவர் விடுதலை விவகாரம் குறித்து பேசிய தமிழிசை, “ஏழு பேரை விடுதலை விவகாரத்தில் திமுக மாநிலத்தில் ஆட்சி செய்துகொண்டிருந்தபோது, மாநில அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி இருக்கலாம். மத்தியில் காங்கிரஸுடனான கூட்டணியில் இருந்தபோது, அழுத்தம் தந்திருக்கலாம். இவர்கள் ஆட்சி செய்யும்போது அதனை முற்றிலுமாக மறந்துவிட்டு, இன்று விடுதலை செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். இதிலேயே திமுகவின் இரட்டை வேடம் தெரிகிறது” என்று விமர்சித்தார். காங்கிரஸ் ஆட்சியில் கையாண்ட விதம்தான் இன்றைய பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குக் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon