மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 ஜுன் 2020

வீட்டில் ஹர்திக் படேல் உண்ணாவிரதம்!

வீட்டில் ஹர்திக் படேல் உண்ணாவிரதம்!

குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்ட ஹர்திக் படேல், இரண்டு நாட்களுக்கு முன்னர் உடல் நலம் குன்றியதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய அவர், இன்று (செப்டம்பர் 10) தனது வீட்டில் 16வது நாளாக உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வருகிறார்.

படிதார் அனாமத் ஆந்தோலன் சமிதி என்ற அமைப்பின் தலைவரான ஹர்தி க் படேல், குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்திப் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று, இவர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

தொடர்ச்சியாக உண்ணாவிரதத்தில் இருந்ததால், ஹர்திக்கின் உடல்நலம் மோசமடைந்தது. சுமார் 20 கிலோ வரை அவரது உடல் எடை குறைந்தது. இதனால், கடந்த 7ஆம் தேதியன்று அவர் தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின், எஸ்ஜிவிபி மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சையளிக்கப்பட்டது. நேற்று (செப்டம்பர் 9) ஹர்திக் படேல் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

காந்திநகரிலுள்ள தனது வீட்டில், இன்று 16வது நாளாகத் தனது உண்ணாவிரதத்தைத் தொடந்து வருகிறார். இதையடுத்து, அவரது வீட்டுக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆனால், அவரது வீட்டுக்குள் நுழையப் பத்திரிகையாளர்களுக்கு போலீசார் தடை விதித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாகத் தொண்டர்களிடம் உரையாடி வருகிறார் ஹர்திக் படேல். காவல் துறை அதிகாரி ஒருவர் தனக்கு மிரட்டல் விடுத்ததாகவும், அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon