மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 ஜுன் 2020

கேஸ் சிலிண்டருக்கு ஆன்லைனில் பணம்!

கேஸ் சிலிண்டருக்கு ஆன்லைனில் பணம்!

சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கு, தற்போது வாடிக்கையாளர்களிடம் இருந்து நேரடியாகப் பணம் பெறப்படுகிறது. இந்த முறையை மாற்றி, ஆன்லைனில் பணம் செலுத்தும் முறை விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது.

சென்னை மண்டலத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மூலம் 3 லட்சம் வாடிக்கையாளர்கள் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் பெற்று வருகின்றனர்.

சென்னை மண்டலத்தில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் தினமும் 77,000 சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஊழியர்கள், வாடிக்கையாளர்களின் வீட்டுக்குச் சென்று நேரடியாக சிலிண்டரை வழங்கி, அதற்குரிய பணத்தைப் பெறுகின்றனர்.

சிலிண்டருக்குரிய பணத்துடன், அவர்கள் எடுத்துக்கொண்டு வந்ததற்கு மறைமுக சேவைக் கட்டணமாகக் கூடுதல் பணமும் பெறுகின்றனர். இது குறித்த புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதைத் தடுக்கவே ‘இ-வேலட்’ எனப்படும் ஆன்லைன் பணப் பரிவர்த்தனையை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் நடைமுறைப்படுத்த உள்ளது. சிலிண்டர் ‘புக்’ பண்ணும் போது அதற்குரிய பணத்தை ஆன்லைனில் செலுத்துமாறு வாடிக்கையாளருக்குத் தகவல் அனுப்பப்படுகிறது. அதை ஒரு சில விநியோகஸ்தர்கள் மட்டுமே நடைமுறைப்படுத்துகின்றனர். இது பெயரளவில் மட்டுமே உள்ளது. எனவே, அதை விரைவில் கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இது குறித்து சிலிண்டர் விநியோகஸ்தர்கள் கூறுகையில், “பல வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் பணம் செலுத்தும் முறையை விரும்பவில்லை. இதன் மூலம் கூடுதலாகப் பணம் எடுத்து விடுவார்களோ என அஞ்சுகின்றனர். அதே நேரத்தில் சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியர்கள் கூடுதலாகப் பணம் கேட்பதாகவும் எங்களிடம் புகார்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன” என்று தெரிவித்தனர்.

வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் பெறப்படும் பணம் உடனடியாகக் கிடைப்பதில்லை என்றும், இடையில் விடுமுறை நாட்கள் வந்து விட்டால் தங்களது கணக்கில் பணம் வந்து சேர 2 அல்லது 3 நாள் ஆகிறது என்றும் கூறினர். “உடனடியாகப் பணம் செலுத்தினால் தான் நாங்கள் சிலிண்டர்களைப் பெறும் நிலை உள்ளது. ஆன்லைன் பணப் பரிவர்த்தனைக்கென்று தனியாக ஒரு ஊழியரை நியமிக்க வேண்டும்” என்றும் தெரிவித்தனர்.

ஆனால் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் முறையை விரைவில் கட்டாயமாக்குவதில் உறுதியாக உள்ளது இந்தியன் ஆயில் நிறுவனம். இதற்காக கேஸ் சிலிண்டர் விநியோகஸ்தர்களுக்கும், டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon