மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 28 மே 2020

அப்பல்லோ மருத்துவர்கள் ஆஜர்!

அப்பல்லோ மருத்துவர்கள் ஆஜர்!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான விவகாரத்தில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், அப்பல்லோ மருத்துவர்கள் இன்று (செப்டம்பர் 10) ஆஜராகியுள்ளனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. சம்மன் அனுப்பப்பட்டும், அப்பல்லோவின் பெரும்பாலான மருத்துவர்கள் நேரில் ஆஜராவதில்லை என்று கண்டனம் தெரிவித்த ஆறுமுகசாமி ஆணையம், சம்மன் அனுப்பப்படுபவர்கள் குறித்த நேரத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

இதையடுத்து கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் ஆஜரானார். அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதி ஆறுமுகசாமி, ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சிசிடிவி காட்சிகளை 7 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையடுத்து, இன்று காலை அப்பல்லோ மருத்துவமனையின் இதய நோய் சிறப்பு மருத்துவர் சாய் சதீஷ், பிசியோதெரபிஸ்ட் ராஜ்பிரசன்னா ஆகியோர் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகினர். அவர்களிடம், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதேபோல், ஜெயலலிதாவின் தனிச் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமலிங்கமும் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். அவரிடமும் விசாரணை நடைபெறுகிறது.

அப்பல்லோ மருத்துவமனை நுரையீரல் சிறப்பு மருத்துவர் பாபு ஆபிரகாம், மதிவாணன் ஆகியோர் செப்டம்பர் 12ஆம் தேதி ஆஜராகச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon