மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 ஜுன் 2020

எழுவர் விடுதலை: ஆளுநருக்கு வலுக்கும் கோரிக்கை!

எழுவர் விடுதலை: ஆளுநருக்கு வலுக்கும் கோரிக்கை!

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஏழு பேரையும் விடுவிக்க ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேரை விடுவிப்பது குறித்து தமிழக அமைச்சரவையில் நேற்று (செப்டம்பர் 9) விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய அரசியலமைப்புச் சட்டம் 161இன்கீழ் விடுதலை செய்ய ஆளுநருக்குப் பரிந்துரைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் காலம் தாழ்த்தாமல் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திமுக தலைவர் ஸ்டாலின்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 27 வருடங்களாகச் சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டுமென்ற தமிழக அமைச்சரவை முடிவினை ஏற்று, அனைத்துத் தமிழர்களும் மகிழ்ச்சியடையும் வகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடனடியாக விடுதலை செய்யும் ஆணையைப் பிறப்பிக்க வேண்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்

ஏழு பேர் விடுதலை ஒட்டுமொத்த தமிழகத்தின் முடிவு. ஆளுநர் காலம் தாழ்த்தாமல் அரசின் பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும்

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர்

ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்ற பட்சத்தில் மத்திய அரசுக்குச் சாதகமாக முடிவு எடுக்க வேண்டும். சட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவானதுதான். இரக்கம், கருணை தேவை தான். ஆனால், ஏழு பேரையும் விடுவித்தல் என்பது தவறான முன்னுதாரணத்தை எதிர்காலத்தில் ஏற்படுத்தும்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்

தமிழக அரசின் பரிந்துரையை ஏற்றுத் தாமதமின்றி ஏழு பேரையும் விடுதலை செய்ய ஆளுநர் உத்தரவிட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம். அமைச்சரவை பரிந்துரை குறித்து மத்திய அரசிடம் ஆளுநர் கருத்து கேட்கத் தேவையில்லை. குடியரசுத் தலைவரின் அனுமதியையும் பெற வேண்டிய அவசியமும் இதில் இல்லை. அரசியல் அமைப்புச் சட்டத்தின் உறுப்பு 161இன்படி ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் குடியரசுத் தலைவரின் அதிகாரத்துக்கு இணையானது. தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றக்கூடிய வரலாற்று வாய்ப்பு தமிழக ஆளுநருக்குக் கிடைத்துள்ளது.

மஜக பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி

ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க ஆளுநருக்குப் பரிந்துரை கடிதம் அனுப்பப்படும் என்ற வரலாறு போற்றும் முடிவைத் தமிழக அமைச்சரவை எடுத்துள்ளது.

பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்

தமிழக அமைச்சரவையின் பரிந்துரை தொடர்பாகத் தமிழக ஆளுநர் என்ன செய்யப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

அற்புதம்மாள்

ஏழு பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்குப் பரிந்துரைக்கப்பட்டதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “27 ஆண்டுக்கால வலிக்குத் தீர்வு கிடைத்துள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, ஏழு பேரை விடுவிக்க இருமுறை அறிவித்தது அனைவருக்கும் தெரியும். ஜெயலலிதா எனக்குப் பாதி நிம்மதி கொடுத்தார் என்றால் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி முழு நிம்மதியையும் கொடுத்திருக்கிறார். நிம்மதியாக இருங்கள் உங்கள் மகன் வருவார் என முதல்வர் என்னிடம் தெரிவித்தார். பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை குறித்து யாரும் அரசியலாக்க வேண்டாம்” என்று குறிப்பிட்டார்.

சனி, 15 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon