மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 28 மே 2020

பெண்கள் பாதுகாப்பு திட்டம்: ரூ.3,000 கோடி ஒதுக்கீடு!

பெண்கள் பாதுகாப்பு திட்டம்: ரூ.3,000 கோடி ஒதுக்கீடு!

முக்கிய எட்டு நகரங்களில் பொது பேனிக் பட்டன் மற்றும் பெண் போலீஸ் ரோந்து குழுக்கள் ஆகியவை பெண்கள் சிறப்புப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விரைவில் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என்றும், இதற்காக ரூ.3,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் மத்திய உள் துறை அமைச்சகம் நேற்று (செப்டம்பர் 9) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மூத்த உள் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், “பெண்கள் பாதுகாப்பு திட்டத்துக்காக நிர்பயா திட்டத்தின்கீழ் ரூ.3,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் பெண்கள் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட முயற்சிகளை நடைமுறைப்படுத்த 2013ஆம் நிர்பயா நிதி அமைக்கப்பட்டது. போக்குவரத்தின்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தங்குமிடங்கள், ஸ்மார்ட் LED தெரு விளக்குகள், தடயவியல் மற்றும் சைபர் குற்ற செல்கள், பாதுகாப்பு மற்றும் சுகாதாரமான நிலையிலான கழிவறைகள், பொது போக்குவரத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவை பெண்கள் பாதுகாப்பு நகரத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் லக்னோ போன்ற நகரங்களில் 2018-2019ஆம் ஆண்டு முதல் 2020-2021ஆம் ஆண்டுக்குள் மேற்கூறப்பட்ட அனைத்துத் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.

டெல்லிக்கு ரூ.663.67 கோடியும், மும்பைக்கு ரூ.252 கோடியும், சென்னைக்கு ரூ.425.06 கோடியும், அகமதாபாத்திற்கு ரூ.253 கோடியும், கொல்கத்தாவுக்கு ரூ.181.32 கோடியும், பெங்களூருக்கு ரூ.667 கோடியும், ஹைதராபாத்திற்கு ரூ.282.50 கோடியும், லக்னோவுக்கு ரூ.195 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாடு துறை, நகர்ப்புற மேம்பாடு மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அந்தந்த நகராட்சி மற்றும் போலீஸ் ஆணையர் ஆகிய அமைச்சகங்களுடன் கலந்தோசித்த பிறகே இந்தத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டில் 3,29,243 ஆக இருந்த பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை, 2016ஆம் ஆண்டில் 3,38,954 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 2015ஆம் ஆண்டில் மட்டும் 34,651 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது, 2016ஆம் ஆண்டில் 38,947 ஆக அதிகரித்தது என தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.

ஞாயிறு, 9 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon