மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 ஜுன் 2020

ஆஸ்திரேலியாவில் இருந்த நடராஜர் சிலை!

ஆஸ்திரேலியாவில் இருந்த நடராஜர் சிலை!

600 ஆண்டு தொன்மை வாய்ந்த 36 ஆண்டுகளுக்கு முன்பு களவாடப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலிய நாட்டு அருங்காட்சியகத்தில் இருப்பதை ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் குலசேகரமுடையார், அறம் வளர்த்த நாயகி அம்மன் கோயில் அமைந்துள்ளது. குலசேகர பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட இக்கோயிலில் தொன்மையான ஐம்பொன் சிலைகள் பல உள்ளன.

இந்த நிலையில் கடந்த 1982ஆம் ஆண்டில் நடராஜர் சந்நிதியின் இரும்பு கதவுகள் உடைக்கப்பட்டு 600 ஆண்டு தொன்மையான ஐம்பொன்னாலான நடராஜர் சிலை, சிவகாமி அம்மன் சிலை, மாணிக்கவாசகர் சிலை, ஸ்ரீபலி நாயகர் சிலை என நான்கு சிலைகளும் களவாடப்பட்டன.

இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில் 1984ஆம் ஆண்டு கண்டுபிடிக்க முடியாத வழக்கு என்று திருநெல்வேலி மாவட்டக் காவல் துறையால் முடித்து வைக்கப்பட்டது.

36 வருடங்களாகத் துப்பு துலங்காமல் கிடந்த இந்த வழக்கில் ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான உயர் நீதிமன்ற புலன் விசாரணைக் குழு துப்பு துலக்கியுள்ளது. களவாடப்பட்ட இரண்டரை அடி உயரமுள்ள நடராஜர் சிலை தற்போது ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிலையை 2001ஆம் ஆண்டு 30 கோடி ரூபாய்க்கு அந்த அருங்காட்சியகத்திற்கு விற்றுள்ளனர். இந்தச் சிலையையும் சேர்த்து இதுவரை எட்டு சிலைகள் ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டுவரப்படவுள்ளன. அனைத்துச் சிலைகளையும் மீண்டும் இந்தியா கொண்டுவந்து அந்தந்த கோயில்களில் ஒப்படைக்கும் நடவடிக்கையில் ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

இது ஒருபுறமிருக்க களவாடப்பட்ட இரண்டடி உயரமுள்ள சிவகாமி அம்மன் சிலை மட்டும் 1985இல் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அச்சிலையைப் பாதுகாப்பு நலன் கருதி அருகிலுள்ள சுப்ரமணியர் திருக்கோயிலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறநிலையத் துறை ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. ஆனால், தற்போதுள்ள சிலை, களவாடப்பட்ட சிவகாமி சிலை இல்லை என சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இதனால் இக்கோயிலில் தற்போது உள்ள மேலும் 15 ஐம்பொன் சிலைகளும் மாற்றப்பட்டு அவற்றுக்குப் பதிலாக போலி சிலை வைக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சிலைகளை ஆஸ்திரேலியாவுக்குக் கடத்திய கும்பல் யாரென்பதையும் கண்டுபிடித்துள்ள சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர், கோயிலில் உள்ள சிலைகள் குறித்தும் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

ஞாயிறு, 9 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon