மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 28 மே 2020

சிறப்புக் கட்டுரை: தற்கொலைக்குச் சமாதி கட்டுவோம்!

சிறப்புக் கட்டுரை: தற்கொலைக்குச் சமாதி கட்டுவோம்!

வினிதா

இன்று (செப்டம்பர் 10) சர்வதேசத் தற்கொலை தடுப்பு நாள்

கண நேரத்தில் ஏற்படும் மனத் தடுமாற்றத்தால் எடுக்கிற முடிவுதான் தற்கொலை. எந்தப் பிரச்சினைக்கும் இது ஒரு முடிவாக அமையாது என்பதை அறிந்தும், நிஜத்திலிருந்து தப்பித்துக்கொள்ளவே தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்கொலை எண்ணம் ஒருமுறை மனதில் வந்துவிட்டாலே, பிரச்சினை ஆரம்பித்துவிடும். இந்த எண்ணங்கள் மேலோங்கிக் காணப்படுகிறவர்களுக்கு அறிவுரை வழங்கி, அவர்களுக்குத் தன்னம்பிக்கை ஏற்படுத்திக் காப்பாற்றுவதற்குத் தற்போது பல அமைப்புகள் பணிபுரிந்து வருகின்றன.

தற்கொலை என்பதைச் சகித்துக்கொள்ள முடியாது என்பதை உணர்ந்த உலக சுகாதார அமைப்பு, இந்தச் செயலைத் தடுக்கும் வகையில், உலக அளவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 10ஆம் தேதியை உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினமாக (World Suicide Prevention Day) அனுசரிக்க முடிவெடுத்து, ஆண்டுதோறும் கடைபிடித்துவருகிறது. இந்த நாள் கடைப்பிடிக்கப்படுவதன் முக்கிய நோக்கம், தற்கொலை எண்ணங்களோடு இருப்பவர்களையும் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுபவர்களையும் அதிலிருந்து மீட்டு, மறுவாழ்வு அளிப்பதுதான். தற்கொலை விளைவு குறித்தும் அதிலிருந்து ஒருவரை மீட்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் இதன் நோக்கம்.

தீர்வாகுமா தற்கொலை?

பிரச்சினைக்குத் தீர்வாகச் சிலர் எடுக்கிற முடிவு வாழ்க்கையின் முடிவாக அமைந்துவிடுகிறது. அவசரத்திலும் அவநம்பிக்கையிலும் தனிமையிலும் எடுக்கும் முடிவையே நம்மில் பலர் இறுதி முடிவாக எடுத்துவிடுகின்றனர். ஒரு விஷயத்தை ஆயிரம் தடவை யோசித்துச் செயல்பட வேண்டும் எனச் சொல்லுகிற நாம், இக்கட்டான கஷ்டமான சூழ்நிலையில் ஒரு நிமிடம்கூட யோசிக்காமல் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு எடுக்கிறோம்.

தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு, ஒருவர் சராசரியாக 20 முறையாவது தற்கொலைக்கு முயற்சி செய்வார் என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது என்கிறார் அரசு மனநல மருத்துவர் அரவிந்தன் சிவக்குமார்.

சட்டென்று முடிவெடுத்துத் தற்கொலைக்கு முயற்சி செய்பவர்களின் எண்ணிக்கை குறைவே. தற்கொலைக்கு முயற்சி செய்பவர்கள் நெருக்கடிகளை உணரும்போது 'வாழ்வா, சாவா' என்ற இருமன ஊடாட்டம் மேலோங்கி இருக்கும். அவர்களுடைய சிந்தனை முழுவதும் பிரச்சினைகள் மட்டுமே ஆக்கிரமித்திருக்கும் சூழலில், அதனால் மனதில் ஏற்படும் வலி, தன் மீதே ஏற்படும் கோபம், வெறுப்பு... இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என்று யத்தனிக்கும் மனநிலை ஆகியவை தற்கொலைதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு என்பதுபோல நினைக்கத் தூண்டிவிடும். இனி வாழ்வதில் பொருளில்லை என்னும் மனநிலையை இவை உருவாக்கிவிடும்.

பிரச்சினையிலிருந்து வெளிவருவதற்கு முயற்சி செய்யாமல், வேறு வழியில்லை என்று நினைத்துத் தனிமையில் தனக்கான முடிவை எடுத்துக்கொள்கின்றனர் சிலர். இவர்களைத் தடுப்பது எப்படி?

தற்கொலைக்கு முயற்சி செய்பவர்கள், நேரடியாகவோ, மறைமுகமாகவோ தன்னுடைய எண்ணங்களை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவார்கள். நான் எதற்கும் லாயக்கு இல்லை, என்னால் யாருக்கு என்ன பிரயோஜனம், எதற்கு வாழ்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை என்ற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துவார்கள். குடும்பத்திற்கும் பிறருக்கும் சுமையாக இருப்பதாக உணரத் தொடங்குவார்கள். சுயத்தின் மீதான நம்பிக்கையில்லாத நிலையில் இப்படித் தோன்றும். இன்னும் சிலர் நேரடியாகவே சொல்வார்கள். அந்த நேரத்தில் கோபப்படாமல் அவர்களுடைய தேவை என்ன, பிரச்சினை என்ன என்பதைக் கண்டறிந்து செயல்படுவது அவசியம் என்கிறார் அரவிந்தன் சிவக்குமார்.

தற்கொலைக்கான காரணங்கள்

தற்கொலை செய்து கொள்வதற்கு உளவியல் ரீதியான காரணங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நம் எண்ணங்கள் செயல் வடிவில் பிரதிபலிப்பதுபோல், தற்கொலைக்கான எண்ணங்களும் நம் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும்போது, அதைச் செயல்படுத்திக் காட்டுகிற துணிச்சலும் அங்கே ஏற்படுகிறது. மன அழுத்தத்தில் சிறிய மன அழுத்தம் (Minor Depression), பெரிய மன அழுத்தம் (Major Depression or Unipolar Depression) என இரண்டு வகை உள்ளன. சிறிய அளவிலான மன அழுத்தங்கள் ஒரு வாரம் அல்லது இரண்டு நாட்களில் சரியாகிவிடும். பெரிய மன அழுத்தங்கள் தொடர்ந்து மனதில் இருந்துகொண்டு தற்கொலைக்கு வழிவகுக்கும்.

அதிகமாகச் சந்தோஷப்படுதல், அதிகமாகத் துக்கப்படுதல் இரண்டுமே ஆபத்தானது. எதையும் சமநிலையோடு கையாளத் தெரிந்திருக்க வேண்டும். நம் மீது நமக்கே ஏற்படும் வெறுப்பும் சுய பச்சாதாபமும் மிகுதியான கழிவிரக்கமும் தற்கொலையில் முடிவடைகிறது. இதைத் தவிர, தாங்க முடியாத ஏமாற்றமும் துரோகமும் தற்கொலைக்கான காரணங்களாகின்றன.

சமூகம், பொருளாதாரம்

தனிநபராக இருந்தாலும், நாம் வாழும் சமூகம் நம்மை அங்கீகரிக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்குமே இருக்கும். அதனால், நாம் செய்யும் ஒரு தவற்றினால் சமூகம் என்ன நினைக்குமோ, நமது கௌரவம் பாதிக்கப்படுமோ (இது அவரவர் வாழ்கின்ற சமூக அந்தஸ்தைப் பொறுத்து மாறுபடும்) என்ற எண்ணத்தில் பல தற்கொலைகள் நிகழ்கின்றன. நம் வாழ்க்கையில் நாம் அதிகம் சார்ந்திருக்கும் உணர்வுரீதியான ஒரு உறவு - கணவன் / மனைவி, காதலன் / காதலி, குழந்தைகள், பெற்றோர் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் - நம்மை வெறுத்து ஒதுக்கும்போது, அல்லது அவர்களை இழக்கும்போது மனம் ஒடிந்துபோகிறது. இந்த நிலையில் அந்த மனம் தற்கொலையைத் தீர்வாகக் காண்கிறது.

கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்படும்போது பலரும் தற்கொலை செய்துகொள்கின்றனர். வாங்கிய கடனைத் தாண்டி வட்டி செலுத்த வேண்டும் அல்லது வீட்டை அபகரித்துவிடுவோம் என்கிற மிரட்டலுக்கு அஞ்சிச் சிலர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

பெரும்பாலான பள்ளி, கல்லூரி மாணவர்கள் எல்லார் முன்னிலையிலும் ஆசிரியர் தன்னைத் திட்டிவிட்டதால் தற்கொலை செய்துகொள்கின்றனர். அவமானத்தைச் சகித்துக்கொள்ள முடியாதபோதும், நம்முடன் பழகியவர்கள் நமக்குத் துரோகம் செய்யும்போது தற்கொலை செய்துகொள்வது சாதாரண நிகழ்வாக மாறிவருவது அதிர்ச்சி அளி்ப்பதாக உள்ளது.

பெருகும் தற்கொலைகள்

இந்தியாவில் எய்ட்ஸ், நீரிழிவு அல்லது புற்றுநோய் ஆகிய நோய்களால் இறப்பவர்களைக் காட்டிலும் தற்கொலையால்தான் அதிகமானவர்கள் இறந்துள்ளனர் என்று பல சுகாதார ஆராய்ச்சி நிறுவனங்கள் கூறுகின்றன.

2014 முதல் 2017 வரை கிட்டதட்ட 26,000 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். 2016ஆம் ஆண்டில் மட்டும் 9,474 பேர் தற்கொலை செய்துகொண்டனர். அதாவது, ஒவ்வொரு 55 நிமிடத்துக்கு ஒரு தற்கொலை.

தற்கொலைக்கான காரணங்கள்

தேர்வுகளில் தோல்வி அடைந்ததற்காக, 2014ஆம் ஆண்டில் 2,403 பேரும், 2015ஆம் ஆண்டில் 2,646 பேரும், 2016ஆம் ஆண்டு 2,413 பேரும் தற்கொலை செய்துகொண்டனர் என உள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் 1,350 பேரும், மேற்கு வங்கத்தில் 1,147 பேரும், தமிழகத்தில் 981 பேரும் தற்கொலை செய்துகொண்டனர்.

நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிக அளவில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். அதற்கு அடுத்த இடத்தில் கர்நாடகா உள்ளது. இந்தப் பட்டியலில், மத்தியப் பிரதேசம் 3ஆவது இடத்திலும், தெலங்கானா 4ஆவது இடத்திலும், தமிழகம் 5ஆவது இடத்திலும் உள்ளன.

2016ஆம் ஆண்டு மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி தமிழகத்தில் 381 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

நாட்டிலேயே மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாகத் தமிழகத்தில்தான் போலீஸ் அதிகாரிகள் அதிக அளவில் தற்கொலை செய்துகொள்கின்றனர். தமிழகத்தில் ஆண்டுக்குச் சராசரியாக 27 போலீஸ் அதிகாரிகள் தற்கொலை செய்துகொள்வதாக தேசிய குற்றப் பதிவுத் துறை ஆவணத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

தமிழகத்தில் 2006ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை 216 போலீஸ் அதிகாரிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

2012ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 58 காவலர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்த எண்ணிக்கை 2011ஆம் ஆண்டைவிட 50% அதிகம். 2012ஆம் ஆண்டில் ஆண்டில் 58 பெண் காவலர்கள் இறந்துள்ளனர்.

இதற்குத் தீர்வு என்ன?

தற்கொலைக்கு முயற்சி செய்பவர்களை இந்தச் சமூகம் கோழைகளாகவும், திறனற்றவர்களாகவும் சித்திரிக்கிறது. அந்த எண்ணத்தைத் தகர்க்க வேண்டும். அந்த எண்ணங்களோடு இருப்பவர்களுடன் அன்பாகப் பழகித் தனிமையிலிருந்து அவர்களை மீட்டெடுக்க வேண்டும்.

தற்போது தொழில்நுட்பமும், மருத்துவ வசதிகளும் பெருகிவிட்டதால், அதற்கென்று செயல்படும் அமைப்புகளைத் தொடர்புகொண்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். இதற்காகப் பல அமைப்புகள் இருக்கின்றன.

பிரச்சினைகளை எவ்வாறு புரிந்துகொண்டு அணுக வேண்டும், எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதைக் குழந்தைப் பருவத்திலிருந்தே கற்றுக் கொடுக்க வேண்டும். எந்தக் காரியத்தையும் தனியாக நின்று செய்து காட்ட முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்கிறார் மருத்துவர் அரவிந்தன் சிவக்குமார்.

தற்கொலை மனநிலைக்குத் தள்ளுவது தவறான மனப்பாங்கும் சமூக அழுத்தமும்தான். இந்த மனப்பாங்கைச் சீராக்கும் மருந்து குடும்பத்தினர், பள்ளிக்கூடம், சுற்றத்தினர், அக்கம்பக்கம் ஆகியோரிடம்தான் இருக்கிறது. குடும்பம் உள்ளிட்ட இந்தச் சூழல் தரும் ஆதரவுதான் ஒருவரைத் தற்கொலையின் பக்கம் செல்லவிடாமல் தடுக்கும். வெற்றி, தோல்வி ஆகியவற்றுக்கு அளவுக்கு அதிகமாக முக்கியத்துவம் தரும் பழக்கம் சமூகத்தில் மாற வேண்டும்.

இதுபோன்ற ஆதரவு போதிய அளவு கிடைக்காமல் தற்கொலை மனநிலைக்குச் சென்றுவிட்டவர்களை அடையாளம் காண நமக்குத் தெரிய வேண்டும். அவர்களிடம் அன்பாகப் பழகி, அவர்களுடைய நிராசையைப் போக்கி அவர்களுக்குத் துணையாக இருக்க வேண்டும். தற்கொலையிலிருந்து மீட்பதற்கான பணியில் ஈடுபட்டிருக்கும் அமைப்புகள் இவ்விஷயத்தில் பெரிதும் உதவிகரமாக இருக்கும்.

குடும்ப உறவுகள், நட்பு உள்ளிட்ட சமூக உறவுகள் ஆகியவை ஆரோக்கியமாக இருந்தாலே பெரும்பாலான தற்கொலைகளைத் தடுத்துவிடலாம்.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon