மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 28 மே 2020

ஃபார்முக்கு வந்த ஜடேஜா: இந்தியா பதிலடி!

ஃபார்முக்கு வந்த ஜடேஜா: இந்தியா பதிலடி!

ரவீந்திர ஜடேஜாவின் துடிப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சரிவிலிருந்து ஓரளவு மீண்டிருக்கிறது.

இந்தியா, இங்கிலாந்து இடையே நடக்கும் ஐந்தாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 332 ரன்கள் சேர்த்தது இங்கிலாந்து. பின்னர் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் முன்னணி விக்கெட்டுகளை இழந்து 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எனும் நிலையில் இருந்தது.

நேற்று (செப்டம்பர் 9) மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய ஹனுமா விஹாரி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் நிதானமாகவும் பொறுப்புடனும் பேட்டிங் செய்தனர். அதன் விளைவாக இருவருமே இதில் அரைசதம் அடித்தனர். ஹனுமா விஹாரி அறிமுக போட்டியிலேயே அரைசதத்தைப் பதிவு செய்தார். அவர் 56 ரன்களும் ஜடேஜா 86 ரன்களும் இறுதியில் சேர்க்க இங்கிலாந்தைவிட கூடுதல் ரன் சேர்க்க முடியவில்லை என்றாலும் இந்திய அணிக்கு 292 எனும் வலுவான ஸ்கோரை இவர்கள் பெற்றுத்தந்தனர்.

40 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியில் அலெஸ்டர் குக் சிறப்பான தொடக்கத்தை அளித்தார். அவருடன் களமிறங்கிய ஜென்னிங்ஸ் 10 ரன்னிலும், அவரைத்தொடர்ந்து மோயின் அலி 20 ரன்னிலும் வெளியேறினர். இறுதியில் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 114 ரன்கள் சேர்த்துள்ளது. இதில் குக் 46 ரன்களுடனும், ரூட் 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்திய அணி சார்பில் சமி, ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர். இந்திய அணியை விட 154 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இங்கிலாந்து அணி இன்று நான்காம் நாள் ஆட்டத்தைத் தொடர உள்ளது. களத்தில் நிற்கும் குக்கிற்கு இந்த இன்னிங்ஸ்தான் அவரது கடைசி டெஸ்ட் கிரிக்கெட் இன்னிங்ஸாக அமையவிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 9 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon