மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 ஜுன் 2020

மனதில் நிற்கும் ஒரு படம்: ஆனந்தி

மனதில் நிற்கும் ஒரு படம்: ஆனந்தி

கதிர், ஆனந்தி இணைந்து நடித்துள்ள பரியேறும் பெருமாள் படத்தின் இசை நேற்று (செப்டம்பர் 9) வெளியாகியுள்ளது.

இயக்குநர் ராமிடம் உதவியாளராகப் பணியாற்றிய மாரி செல்வராஜ் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘பரியேறும் பெருமாள்” பா.இரஞ்சித் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே படத்தில் இடம்பெற்றுள்ள ‘கருப்பி’ பாடல் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் அனைத்துப் பாடல்களையும் தனுஷ் நேற்று இணையத்தில் வெளியிட்டார்.

பாடல்களை விவேக், இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் இணைந்து எழுதியுள்ளனர். மண் மாறாமல் உருவாகியுள்ள பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகின்றன. அதோடு படக்குழு பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய கதிர், “ஒரு நடிகருக்கு இந்த மாதிரியான ஒரு படம் அமைவது, இந்த மாதிரியான குழுவோடு இணைந்து பணியாற்றுவது முக்கியமான விஷயம். அது எனக்குக் கிடைத்துள்ளது. திரைக்கதையைப் படிக்கும்போதே இந்தப் படம் நன்றாக வரும் என்பதை உணர்ந்தேன். உணர்ச்சிமிக்க காட்சிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்தும் சரியாக கையாளப்பட்டுள்ளன. தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக பரியேறும் பெருமாள் அமையும்” என்றார்

கதாநாயகி ஆனந்தி தனது உரையில், “இந்தப் படம் நிறைய நாள் என் மனசுல இருக்கும். என் திரைப்பயணத்தில் இது முக்கியமான படம். ரஞ்சித் சாருடன் பணியாற்ற வேண்டும் என்பது எனது ஆசை. இந்தப் படத்தில் அவரது தயாரிப்பில் நடித்துள்ளேன். எனக்கு மனநிறைவாக உள்ள இந்தப் படம் உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் பேசும் போது, “முதல் படத்தை மிகவும் ஜாலியாக, வசூல் ரீதியாக வெற்றிபெறும்படியான திரைக்கதை அமைக்கச் சொல்லி எனது இயக்குநர் ராம் கூறினார். நான்கு ஆண்டுகள் திருநெல்வேலி சட்டக் கல்லூரியில் ஜாலியாகச் சுற்றித் திரிந்த நாள்களை அடிப்படையாகக் கொண்டு கதை எழுதத் தொடங்கினேன். எழுதும்போதுதான் அது எவ்வளவு துயர்மிகுந்த வாழ்க்கை என்பது தெரிந்தது. அந்த நான்கு ஆண்டுகளில் நான் பார்த்த மனிதர்களின் கதைதான் பரியேறும் பெருமாள்” என்று கூறினார்.

பரியேறும் பெருமாள் பாடல்கள்

ஞாயிறு, 9 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon