மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 ஜுன் 2020

ரயில் விபத்து: உயிரிழப்பு குறைந்துள்ளது!

ரயில் விபத்து: உயிரிழப்பு குறைந்துள்ளது!

கடந்த ஐந்தாண்டுகளில் நடந்த விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைவிட, 2017 செப்டம்பர் முதல் 2018 ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் 75 ரயில் விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.

ஆண்டு வாரியாக புள்ளிவிவரம்

இது தொடர்பாக ரயில்வேயில் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில்,

2016 செப்டம்பர் முதல் 2017 ஆகஸ்ட் வரை நடந்த 80 ரயில் விபத்துகளில் 249 பேர் உயிரிழந்துள்ளனர். நவம்பரில் இந்தூர் - பாட்னா எக்ஸ்பிரஸ் கான்பூர் அருகே தடம்புரண்டு 150 பேர் உயிரிழந்தனர். ஆகஸ்ட்டில் உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு 20 பேர் உயிரிழந்தனர். ஆகஸ்ட் மாதம் உத்தரப் பிரதேசத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 13 குழந்தைகள் உயிரிழந்தனர்.

மேலும், 2013 செப்டம்பர் 2014 ஆகஸ்ட்டில் 139 ரயில் விபத்துகளில் 275 பேரும், 2014 - 2015 காலகட்டத்தில் 108 விபத்துகளில் 196 பேரும் உயிரிழந்துள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் தகவல்

இது தொடர்பாக அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது, “2013 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் வரை காலகட்டத்தில் 62 சதவிகிதமாக இருந்த உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது, 2017 - 2018 காலகட்டத்தில் 4 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. காயமடைந்தோரின் எண்ணிக்கையும் 272 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. ரயில்கள் மோதல், தடம் புரள்வதும் 69 சதவிகிதத்திலிருந்து 56 சதவிகிதமாகக் குறைந்துள்ளது” என்று கூறினர்.

ரயில்வே துறை இணையமைச்சர் ராஜென் கொஹைன்னிடம் ஆளில்லாத ரயில்வே கிராசிங் தொடர்பாக மக்களவையில் (04.04.2018) கேட்ட கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், “ரயில் பாதுகாப்பில் முக்கியமாக, 2020க்குள் ஆளில்லாத ரயில்வே கிராஸிங்கை முற்றிலுமாக அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது. 2017 - 2018 காலகட்டத்தில் இந்தியா முழுவதும் 1,565 ஆளில்லா ரயில்வே கிராஸிங்குகள் மூடப்பட்டன. இதனால் விபத்துகள் பெருமளவு குறைந்துள்ளன. 2018 -2019 காலகட்டத்தில் 1,600 ஆளில்லா ரயில்வே கிராஸிங்கை மூட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆளில்லா ரயில்வே கிராஸிங்குகளில் நடந்த விபத்துகளில் 2013 - 2014இல் 52 பேரும், 2014 - 2015இல் 39 பேரும், 2015 -2016இல் 23 பேரும், 2016 -2017இல் 13 பேரும், 2017 - 2018இல் 8 பேரும் உயிரிழந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 9 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon