மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 ஜுன் 2020

சிறப்புக் கட்டுரை: கருத்துரிமைக்கான ஆதரவில் பாரபட்சம்!

சிறப்புக் கட்டுரை: கருத்துரிமைக்கான ஆதரவில் பாரபட்சம்!

சல்மா

கருத்துரிமை குறித்த விவாதங்கள் நாடு முழுக்க நடந்துகொண்டிருந்த நேரத்தில்தான் மாணவி சோபியா ஆளும் பாஜகவுக்கு எதிராக கோஷம் எழுப்பி இந்த விவாதத்தை மேலும் பலப்படுத்திருக்கிறார்.

நீண்ட நாள் வெளிநாட்டு வாசத்திற்குப் பிறகு சொந்த ஊருக்கு வரும் நேரத்தில் அந்தப் பெண்ணுக்கு பாஜக தமிழகத் தலைவர் தமிழிசையோடு பயணிக்கிற வாய்ப்பு கிடைக்கிறது.

தனது மண்ணையும் மக்களையும் நேசிக்கக்கூடிய அந்தப் பெண், தன் கோபத்தை, எதிர்ப்பை வெளிப்படுத்தக் கிடைத்த சந்தர்ப்பமாக அதை உணர்கிறார். அந்த உணர்வு நிலைக்கு உட்பட்டவராக நடந்துகொண்டதன் விளைவே இந்தச் சம்பவம்.

சோபியா பலமுறை விமானப் பயணம் மேற்கொண்டவர். விமானம் பறக்கும்போது கோஷம் எழுப்புவது, பயணிகளுக்கு இடையூறு செய்வது குற்றம் என அவருக்குத் தெரியும். அதையும் மீறி அவர் தனது கோபத்தைக் காட்டியே ஆக வேண்டும் என்னும் முடிவோடு இருந்திருக்கிறார். விமானம் தரை இறங்கும்வரை காத்திருந்து, தமிழிசை தனது உடமைகளை எடுத்துக்கொண்டிருக்கும்போது அவரது அருகே வந்து நின்று “பாசிச பாஜக ஒழிக” என்று சொல்லிவிட்டு வெளியே வந்திருக்கிறார்.

விமானம் பறந்துகொண்டிருக்கும்போது அவர் கோஷம் எழுப்பியிருந்தால் விமான நிலையப் பணியாளர்கள் ஒரு நொடியும் தாமதிக்காமல் சோபியாவைச் சுற்றிக் கட்டம் கட்டியிருப்பார்கள். அதன்பிறகு அவர் மீது கடுமையான நடவடிக்கை அப்போதே பாய்ந்திருக்கும். அதற்குத் தமிழிசையின் புகாரோ, வேறெதுவுமோ தேவையே இருந்திருக்காது. தேவையெனில் விமானத்தைத் திருப்பி, சோபியாவைக் கீழே இறக்கி, சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். ஆனால், விமானம் நின்ற பிறகு, பயணிகள் இறங்க ஆரம்பிக்கும்போதுதான் சோபியா கோஷமிட்டார்.

குரல்வளையை நெரிக்கும் சூழல்

ஒரு ஜனநாயக நாட்டின் குடிமக்கள் தமது எதிர்ப்புக் குரலை வெளிப்படுத்துவதற்கான இடம் உண்டு என்று நம்புகிறார்கள். அதனாலேயே அந்த வாய்ப்பைப் பயன்படுத்த முயற்சி செய்கிறார்கள். அப்பெண் நம்பியதும் அதைத்தான். ஆனால், சென்ற வாரத்தில் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கும் ஐவரை இந்த அரசு அர்பன் நக்சல் என கட்டம்கட்டிக் கைது செய்ததையும், அதற்காக நாடெங்கும் நடந்துகொண்டிருக்கும் போராட்டங்களும் இன்னும் நடந்துகொண்டிருக்கும் நேரம் இதுவென அப்பெண் அறிந்திருக்கவில்லை போலும். அரசுக்கு எதிராகப் போராடுபவர்கள், பேசுபவர்கள், எழுதுபவர்கள் என ஒவ்வொருவரையும் பயங்கரவாதிகளாகச் சித்திரிக்க இந்த அரசு படுகிற பாடுகளையும் அவர் அறிந்திருக்க மாட்டார்.

முதிர்ந்த அரசியல்வாதியான தமிழிசை, அம்மாணவிக்குக் காட்டிய எதிர்வினை அநாகரிகத்தின் உச்சம். தனக்கு விருப்பமானதை மட்டுமே அனைவரும் பேச வேண்டும் என விரும்புகிறது இந்த பாஜக அரசு. தானே எல்லாமும் என்கிற நம்பிக்கையுடன் இயங்கக்கூடிய அந்த அரசை நடத்தும் கட்சியின் மாநிலத் தலைவர் மட்டும் வேறு மாதிரியாகவா இருப்பார்?

அரசியல் கட்சிக்குத் தலைவராக இருப்பவர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. மக்கள் ஒரு கட்சியை நம்பி வாக்களிக்கிறார்கள். காலப்போக்கில் அந்த ஆட்சியின் மீது நம்பிக்கை இழக்கிறார்கள். அக்கட்சியைத் தேர்ந்தெடுத்தவர்கள், அதிருப்தியைக் காட்டுவதற்கும் தங்களுக்கு உரிமை உண்டென நம்புவதுதானே யதார்த்தம்?

இன்று இந்தியாவெங்கும் போராட்டங்கள் நடக்கின்றன. விமர்சனங்களும் உரக்க ஒலித்துக்கொண்டிருக்கின்றன. தான் நம்பும் கடவுளையே, உனக்குக் கண்ணில்லையா, காது கேட்கவில்லையா என்று சொல்லக்கூடியவர்கள்தானே மக்கள்? பாஜகவை மட்டும் சொல்ல மாட்டார்களா... இல்லை, சொல்லக் கூடாதா?

சோபியாவின் உணர்வுகளுக்கு என்ன மதிப்பு?

தான் அவமானப்படுத்தப்பட்டதாகக் கூக்குரல் இட்ட தமிழிசை, தான் சொன்ன ஒற்றை வார்த்தைக்காக பாஜக தொண்டர்களால் சோபியா எதிர்கொண்ட ஓராயிரம் ஆபாச வார்த்தைகளுக்காகக் கொஞ்சமேனும் வெட்கப்பட்டாரா? அதைக் கண்டித்தாரா? ஒற்றை வார்த்தையைச் சகிக்க மாட்டேன் என்று ஆடித் தீர்த்தவர், சோபியா ஓராயிரம் வார்த்தைகளைச் சகித்துக்கொள்ள வேண்டும் என்று நம்புகிறாரா?

ஒற்றை வார்த்தைக்கு 15 நாட்கள் சிறைவாசம் என்றால் இவர்களுக்கு?

தனியொரு மனுஷி எழுப்பும் எதிர்ப்புக்குப் பின்னணியில் ஓர் ‘இயக்கத்தை’க் கட்டியெழுப்பி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் இந்த அராஜக அரசும் அவர்களது ஏவலாளாகச் செயல்பட்டு சோபியாவின் தந்தை தந்த கொலை மிரட்டல் மனுவினைப் புறக்கணித்த மாநில அரசின் காவல் துறையும் இந்தியாவில் கருத்துரிமையில்லை என்பதை மட்டுமன்றி பாசிச ஆட்சி நடப்பதையும் உறுதிப்படுத்துகின்றன.

இன்னொரு அத்துமீறல்

இந்தப் பிரச்சினையை ஒட்டி சமூக வலைதளங்களில் நடந்த இன்னொரு விவாதத்தை இங்கே பேச வேண்டியதிருக்கிறது. பெண்ணியச் செயற்பாட்டாளர் தோழி ஓவியா, சோபியாவின் செயலைக் கண்டித்து முன்வைத்த கருத்தை ஒட்டிப் பல்வேறு விதமான விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடந்தன.

ஜனநாயக அமைப்பின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் என நாம் நம்பியிருந்த பலரும் மிக மோசமாக ஓவியாவைக் கடுமையாக விமர்சித்துக்கொண்டிருந்தார்கள். அவரைச் சாதி வெறியர், பாஜகவின் கைக்கூலி என்றெல்லாம் அடையாளப்படுத்த முயன்றார்கள். அவரது கருத்திற்கு அவர்கள் இத்தகைய எதிர்வினை ஆற்றியது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

சோபியாவின் கருத்துரிமைக்காகப் பேசுபவர்கள்தான் ஓவியாவின் கருத்துரிமைக்கு எதிராகப் பேசுகிறார்கள். பதற்றம் கொள்கிறார்கள். சமூகப் பிரச்சினைகளுக்காகத் தங்களோடு நின்று போராடிய அவரை சந்தேகிக்கிறார்கள், அவதூறு செய்கிறார்கள். இத்தனை ஆண்டுக் கால அவரது சமூகப் பங்களிப்பைக் கேள்விக்கு உட்படுத்துகிறார்கள். சோபியாவுக்கு எந்த உரிமை வேண்டும் என்று கோருகிறார்களோ, அதே உரிமையை ஓவியாவுக்கு அவர்கள் மறுக்கிறார்கள்.

நம்மோடு இணைந்தே இருந்த ஓவியாவை உங்களால் சந்தேகிக்க இயலும் என்றால், எங்கிருந்தோ வரக்கூடிய, யாரென்றே தெரியாத சோபியாவைச் சந்தேகிக்க பாஜகவுக்கும் தமிழிசைக்கும் வாய்ப்பு உண்டுதானே?

கருத்துரிமை என்பது, ஒவ்வொருவரும் தான் விரும்புவதைப் பேசுவதற்கான உரிமை. நாம் விரும்புகிறபடியே பிறர் பேச வேண்டும் என்பது கருத்துரிமைக்கும் ஜனநாயக உணர்வுக்கும் முற்றிலும் எதிரானது. நாம் விரும்பாததைப் பிறர் பேசும்போதும் அப்படிப் பேசுவதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு என்று நாம் சொல்லும்போதுதான் நாம் கருத்துரிமைக்கு ஆதரவானவர்கள் எனப் பொருள். தனக்கு எதிரானவர்களை ஒடுக்க நினைக்கும் இந்த அரசுக்கும், ஜனநாயக சக்திகள் எனத் தங்களைச் சொல்லிக்கொண்டே தங்களுடன் முரண்படுபவர்களை வசைபாடுபவர்களுக்கும் இடையில் என்ன வித்தியாசம்?

நாம் கருத்துரிமைக்காகக் குரல் கொடுப்போம். சோபியாவின் கருத்துரிமைக்காகவும் சோபியாவைக் கண்டிப்பதற்கான ஓவியாவின் உரிமைக்காகவும். ஜனநாயக உரிமை என்பது நபரைப் பொறுத்து மாறக்கூடியது என்றால் அது உரிமையே அல்ல. உரிமை மீறல். தனக்கு எதிரானவர்களை ஒடுக்க இந்த அரசு தன் அதிகாரத்தையும் சகலவிதமான ஆற்றல்களையும் பயன்படுத்துகிறது என பாஜக அரசைக் குறைகூறுபவர்கள் அதே பிழையைச் செய்யலாகாது. அப்படிச் செய்தால் அதிகாரப் பீடத்தினரின் பாசிசத் தன்மையைக் கேள்விக்கு உட்படுத்தும் உரிமையை நாம் இழந்துவிடுகிறோம்.

(கட்டுரையாளர்: சல்மா கவிஞர், நாவலாசிரியர். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon