மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 28 மே 2020

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

சுற்றுச்சூழலுக்காக ஒரு சர்வதேசக் குரல்!

“இந்தியா, சீனா ஆகிய வளரும் நாடுகளுக்கு மானியம் வழங்குவதை நிறுத்த வேண்டும். இவ்விரு நாடுகளின் வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது, அமெரிக்காவும் வளரும் நாடுதான்.”

- அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்

பாரிஸ் உடன்படிக்கை நிறைவேற்றப்பட்டு மூன்று வருடங்கள் ஆகின்றன. ஆனால், அவற்றைச் செயல்படுத்துவதற்கான முயற்சிகள் முழுமையடையவில்லை. வளரும் நாடுகள்தான் பொருளாதார வளர்ச்சிக்காகத் தொழில்மயத்தை தேவைக்கதிகமாக ஆதரிக்கும். சுற்றுச்சூழல் குறித்த குறைந்தபட்ச அக்கறையையும் நிராகரிக்கும். எனவே, வளரும் நாடுகளுக்கான தொழில் விதிகளை வகுத்தளித்தது பாரிஸ் உடன்படிக்கை. இவ்வுடன்படிக்கையில் அமெரிக்கா இன்றுவரை தனது இரட்டை நிலைப்பாட்டை நிறுத்தவில்லை. இன்னும் வளர்ச்சி வேண்டும் என்று தீவிரமாகச் சிந்திக்கும் ட்ரம்ப் வெளிப்படையாக உடன்படிக்கையுடன் உடன்பட மறுத்துவருகிறார்.

கேரளாவின் பேரிடர், ஜப்பான் பேரிடர் எனப் பருவ நிலை மாற்றத்தின் எதிர்வினையாக இயற்கைச் சீற்றங்களை எதிர்கொண்டு வருகிறோம். இன்னும் பருவ நிலை மாற்றத்தைப் புறக்கணித்தால், மொத்தப் புவியின் அழிவும் இந்த நூற்றாண்டுக்குள் நிகழும் என்பது கணிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுச்சூழல் விவகாரத்தில் உலக நாடுகளை ஒருங்கிணைக்கும் பாரிஸ் ஒப்பந்தம் மீண்டும் கவனம் பெறத் தொடங்கியிருக்கிறது.

பருவநிலை மாறுபாடு தொடர்பான பாரிஸ் மாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையில் கூறப்பட்ட விதிகளைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவருவது குறித்த பேச்சுவார்த்தை பாங்காக்கில் உள்ள ஐநா மண்டல அலுவலகத்தில் கடந்த 4ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இது பெயரளவில்தான் நடக்கிறது என்றும், இந்தப் பேச்சுவார்த்தை சர்வதேச கவனம் பெற வேண்டும் என்றும் ஐநா மண்டல அலுவலகம் எதிரே பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தாய்லாந்தின் மீனவர்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் போராட்டம் நடத்தினர்.

இந்தப் பேச்சுவார்த்தையின் இறுதிச் சுற்று வரும் டிசம்பர் மாதம் போலந்தில் நடைபெறவுள்ளது. அதற்குள் பருவநிலை மற்றம் குறித்த பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டக் குழுவினர் கோஷம் எழுப்பியுள்ளனர்.

உலக அளவில் நடைபெறும் பேரழிவுகள், சர்வதேசச் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை ஒன்றிணைத்துள்ளன. சுற்றுச்சூழலுக்கான முதல் சர்வதேச குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

- நரேஷ்

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon