மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 ஜுன் 2020

பேராசிரியர்கள் பற்றாக்குறை: அமைச்சர் விளக்கம்!

பேராசிரியர்கள் பற்றாக்குறை: அமைச்சர் விளக்கம்!

அரசுக் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை ஏதுமில்லை என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார்.

சேலம் இரும்பாலை மனமகிழ் முத்தமிழ் மன்றம் சார்பில் நேற்று (செப்டம்பர் 9) நடைபெற்ற விழாவில் பங்கேற்ற கே.பி.அன்பழகன், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “இந்தியாவில் உயர்கல்வியில் சிறந்து விளங்கும் முன்னோடி மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் சமீபத்திய அகில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பு அறிக்கையின்படி, இந்தியாவிலேயே உயர்கல்வி படிக்கக்கூடிய மாணவ, மாணவிகளுடைய சேர்க்கையில் தமிழ்நாடு 48.6 சதவிகிதம் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. உயர்கல்வித் துறையில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் கால தாமதம் ஏற்படுகிறதே தவிர, பற்றாக்குறை இருக்கிறது என்று சொல்வது தவறான தகவல்.

ஆசிரியர் தகுதி தேர்வு மூலமாக விரைவில் ஆசிரியர்களை நியமிக்க இருக்கிறோம். மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக கல்லூரிகளில் முதல் ஷிப்ட்டில் 1,883 கவுரவ விரிவுரையாளர்களும், இரண்டாவது ஷிப்ட்டில் 1,661 கவுரவ விரிவுரையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமில்லை. வரும் 2018-19ஆம் கல்வி ஆண்டுகளில் 264 புதிய பாடப் பிரிவுகளைக் கொண்டுவரவுள்ளோம். அதற்கேற்றவாறு ஆசிரியர்களையும் நியமிக்கவுள்ளோம். உயர்கல்வித் துறையில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் கால தாமதம் ஏற்படுகிறதே தவிர, பற்றாக்குறை ஏதுமில்லை” என்று தெரிவித்தார்.

முன்னதாக, நேற்று காலை பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “அரசு கல்லூரிகளின் ஒட்டுமொத்த பணியிடங்களில் 30 விழுக்காட்டுக்கும் அதிகமாகும். 30% காலியிடங்களை வைத்துக் கொண்டு அரசு கல்லூரிகளில் எப்படி தரமான கல்வித் தர முடியும்?” என்று தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon